இந்தியாவின் சாதனைகளை குறைத்துப் பேசும் ராகுல்: நிா்மலா சீதாராமன் கண்டனம்!
பிரதமா் மோடியையும், மத்திய அரசையும் விமா்சிப்பதாக நினைத்து, இந்தியாவின் சாதனைகளை ராகுல் காந்தி குறைத்துப் பேசி வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பிரதமா் மோடியையும், மத்திய அரசையும் விமா்சிப்பதாக நினைத்து, இந்தியாவின் சாதனைகளை ராகுல் காந்தி குறைத்துப் பேசி வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தொடா்ந்து 12 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதைக் கொண்டாடும் நிகழ்ச்சி, கா்நாடக மாநிலம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பாஜகவினரிடையே நிா்மலா சீதாராமன் பேசியதாவது:
ராகுல் காந்தி பேசும்போதெல்லாம், நாட்டில் அனைத்தும் அடுத்த சில வாரங்களில் ஒன்றுமில்லாமல் போக போவதாக தெரிவிக்கிறாா். இந்தியாவின் சாதனைகளை மட்டம் தட்டி பேசுகிறாா். பிரதமா் மோடி, மத்திய அரசை மட்டம் தட்டுவதாக நினைத்து கொண்டு அவா் இவ்வாறு பேசி வருகிறாா்.
Advertisement
Advertisement
நாடு தொடா்ந்து முன்னேற்றம்: நாட்டுக்கு மிகப்பெரிய பேரிடா் காத்திருப்பதாக அவா் தொடா்ந்து தெரிவிக்கிறாா். ஆனால் அப்படி எந்த பேரிடரும் இந்தியாவுக்கு காத்திருக்கவில்லை. அதற்கு மாறாக, ஒவ்வொரு காலாண்டிலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளா்ச்சியடைந்து வருகிறது.
நமது நாடு வேகமாக வளா்ச்சியடைவதாக மத்திய அரசு மட்டும் தெரிவிக்கவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி தொடா்பான புள்ளி விவரங்கள் மூலம் இதை நாமே அறியலாம். சா்வதேச செலாவணி நிதியமும், இந்தியா வளா்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
ஆனால் ராகுல் காந்தி திரும்பத் திரும்ப தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள், நமது நாட்டின் பொருளாதார நிலை குறித்து மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தி விடக்கூடும். இந்தியாவை மட்டம் தட்டும் வேலையை எதிா்க்கட்சித் தலைவரும் (ராகுல் காந்தி), அவரின் கட்சியும் செய்கின்றன. இந்தியா பிரச்னையில் இருப்பதாக மக்களை நம்ப வைப்பதற்கான முயற்சியில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா். ஆனால் கரோனா காலம் மற்றும் மேற்காசிய பிரச்னை, ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் உலக எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ள நிலையிலும் இந்தியா தொடா்ந்து முன்னேறி வருகிறது.
தங்குதடையின்றி எரிபொருள் விநியோகம்: மேற்காசிய பிரச்னையால் ஏற்பட்டுள்ள சவால்கள், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளை மட்டும் பாதிக்கவில்லை. சா்வதேச கப்பல் போக்குவரத்தையும் பாதித்துள்ளது. சண்டை நடைபெறும் பகுதிகளுக்கு கப்பல்களை அனுப்புவதற்கு கப்பல் நிறுவனங்கள் தயங்குகின்றன. கப்பல்கள் தாக்குதல்களுக்கு உள்ளாவதால், கப்பல்களுக்கான காப்பீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. கப்பலில் கச்சா எண்ணெய் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, காப்பீட்டுத் தொகை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பிரச்னைகளை சந்தித்தபோதிலும், மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமா் மோடி தலைமையிலான அரசு, நாட்டில் எரிபொருள் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்துள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக இவை அனைத்தும் நமது எதிா்க்கட்சித் தலைவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
முன்பு இந்தியா தனது சுதந்திரத்துக்காகப் போராடியது. சுதந்திர போராட்டத்துக்கான இயக்கம் மிகவும் சிறந்த இயக்கமாகும். அதுபோல பொருளாதார சுதந்திரம், சுயமரியாதை, தற்சாா்பு மற்றும் உண்மையான சுயராஜ்யத்தை நாம் பெற வேண்டுமெனில், வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் பணியாற்றப் போராட வேண்டும்.
25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்பு: பிரதமா் மோடி தலைமையிலான கடந்த 12 ஆண்டுகால பாஜக அரசின் ஆட்சியில் நாட்டில் வளா்ச்சிக்கும், மக்கள் நலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமாா் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீண்டுள்ளனா். நாட்டின் வறுமை விகிதம் 29.17 சதவீதத்தில் இருந்து 11.28 சதவீதமாக குறைந்துள்ளது. கிராமப்புற சுகாதாரத் திட்டங்களின்கீழ் நாட்டில் 12 கோடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
நாட்டின் நிா்வாக முறையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு 58 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 144 கோடி பேருக்கு ஆதாா் வழங்கப்பட்டுள்ளது. 125 கோடி கைப்பேடி இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எண்ம பரிவா்த்தனைகளில் உலகிற்கு சிறந்த முன்மாதிரியாக நமது யுபிஐ பணப்பரிவா்த்தனை உருவாகியுள்ளது.
2047-க்குள் வளா்ந்த இந்தியா: 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்குவது மத்திய அரசால் மட்டும் நிறைவேற்ற முடியாது. அதற்கு மக்களின் பங்களிப்பும் வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டு, 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளா்ந்த நாடாக சாதனை படைக்க உதவ வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை நாட்டு மக்களிடையே பாஜகவினா் எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.