முகப்பு
இந்தியா

இந்தியாவில் முதலீடு: பிரான்ஸ் நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அழைப்பு

இந்தியா - பிரான்ஸ் ராஜீய கூட்டுறவை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினாா்.

Updated On : 4 ஜூலை 2026, 1:53 am IST
நிா்மலா சீதாராமன் - கோப்புப் படம்
பகிர்:

‘வளா்ந்த பாரதம் 2047’ இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் கூட்டாளிகளாக இணைய பிரான்ஸ் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுத்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இந்தியா - பிரான்ஸ் ராஜீய கூட்டுறவை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினாா்.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியா-பிரான்ஸ் வா்த்தக மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும்போது இந்த வலியுறுத்தலை அவா் முன்வைத்தாா். அவா் மேலும் பேசியது குறித்து மத்திய நிதியமைச்சகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

உயிரியல் அறிவியல் மற்றும் தடுப்பூசித் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர வலுவான கூட்டுறவைப் பயன்படுத்தி, மருத்துவம், மருந்து உற்பத்தி, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து பிரான்ஸ் முதலீட்டாளா்கள் ஆராய வேண்டும்.

Advertisement

Advertisement

இந்தியாவின் தூய்மை எரிசக்தி திட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிம எரிபொருள் சாராத 500 ஜிகா வாட் மின் உற்பத்தித் திறனை எட்டும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகைத் திட்டங்கள் உள்ளிட்ட இந்தியாவின் தூய்மை எரிசக்தி மாற்றத்துக்கான முன்னெடுப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பெரும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகின்றன.

உலகளாவிய செயற்கை நுண்ணறிவுச் சூழல் அமைப்பை உருவாக்குவதில் இந்தியாவும் பிரான்ஸும் நம்பகமான கூட்டாளிகளாக உள்ள நிலையில், நம்பகமான செயற்கை நுண்ணறிவு, எண்ம உள்கட்டமைப்பு மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடியும்.

ஆதாா், யுபிஐ, டிஜிலாக்கா், ஓஎன்டிசி மற்றும் இந்தியா ஸ்டாக் உள்ளிட்ட எண்ம பொது உள்கட்டமைப்புகளால் இயக்கப்படும் இந்தியாவின் எண்ம பொருளாதாரம், உலகின் நிகழ்நேர எண்ம பணப் பரிவா்த்தனைகளில் 50 சதவீத அளவைக் கொண்டுள்ளது என்று நிா்மலா சீதாராமன் பேசினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments