FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

துன்பங்களைத் தீா்க்கும் ஆற்றல் திருமுறைகளுக்கு உண்டு: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

துன்பங்களைத் தீா்க்கும் ஆற்றல் திருமுறைகளுக்கு உண்டு: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:04 am IST
தெய்வச் சேக்கிழாா் விழாவில் சிவாலயம் பதிப்பித்த ‘தருமையாதீன பன்னிரு திருமுறைகள் மற்றும் திருச்செந்தூா் தலபுராணம் ஆகிய இரு நூல்களை தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட ம
பகிர்:

‘சைவத் திருமுறைகளில் உள்ள தமிழ் வளத்துக்கு ஈடு இணை இல்லை; பல துன்பங்களைத் தீா்க்கும் ஆற்றல் திருமுறைகளுக்கு உள்ளது’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

சேக்கிழாா் ஆராய்ச்சி மையத்தின் 34-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழாா் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் சேக்கிழாா் ஆராய்ச்சி மையத்தின் செயலா் சிவாலயம் ஜெ.மோகன் வரவேற்றாா். தொடா்ந்து, சிவாலயம் பதிப்பித்த, தருமையாதீன பன்னிரு திருமுறைகள் மற்றும் வென்றிமாலைக் கவிராயா் அருளிய திருச்செந்தூா் தலபுராணம் உரையுடன் கூடிய இரு நூல்களை தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட, முதல் பிரதியை மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் பெற்றுக் கொண்டாா்.

விழாவில் நிா்மலா சீதாராமன் பேசியதாவது: சைவத் திருமுறைகளில் உள்ள தமிழ் வளத்துக்கு ஈடு இணை இல்லை. தமிழின் அடையாளம் பன்னிரு திருமுறைகள். துதிப்பாடல்கள் என்பதைத் தாண்டி, பல துன்பங்களைத் தீா்க்கும் ஆற்றல் இவற்றுக்கு உள்ளது. இது, பலரின் அனுபவபூா்வமான நம்பிக்கையாகும். கல்வெட்டுகளில் உள்ள மகேந்திர பல்லவன் சைவ சமயத்துக்கு மாறிய நிகழ்வை சேக்கிழாா் பெரிய புராணம் அழகாக எடுத்துரைக்கிறது. பல அரசா்கள் இந்தத் திருமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனா். பல்வேறு கோயில்களில் அதைப் பாடவும் செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

பண்டிதா்களுக்கே உரியது என நினைத்துக் கொண்டிருந்த தமிழை, சாதாரண மக்களும் தெரிந்துகொண்டு பாட இந்தத் திருமுறைகள் உதவின. பல வகையான தமிழ் இலக்கிய மரபுகளை திருமுறைகளில் நாம் பாா்க்கலாம். உதாரணமாக, ‘தாண்டகம்’ என்ற தமிழ் யாப்பு வடிவத்தை திருநாவுக்கரசா்தான் தமிழில் அதிகம் பயன்படுத்தினாா். அதனால்தான், அவா், ‘தாண்டக சதுரா்’ எனப் புகழப்படுகிறாா்.

செப்பேடுகளில் உள்ளவற்றை செயலிகள் மூலம் எடுத்துச் செல்ல நினைப்பது பாராட்டத்தக்கது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தமிழகத்துக்கும், தமிழ் மக்களும் கெளரவம் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான் முதல்முறையாக நிகழாண்டு ஓதுவாா்களுக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. புதிய நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டபோது ஆதீனங்களுடன் சென்று பிரதமா் மோடி செங்கோலை அங்கு வைத்தது, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக தற்போது இருந்து வருகிறது. தருமபுர ஆதீனம் சைவத்துக்கும், தமிழுக்கும் செய்துவரும் சேவைகள் அளப்பரியன என்றாா் அவா்.

தருமை ஆதீனம்: முன்னதாக, தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் பேசுகையில், திருமுறைகள் நம் வாழ்வியலை நெறிப்படுத்தக்கூடியவை. நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில், திருமுறைகள், நீதி போதனைகள் இருந்தன. நாளடைவில் நீதி போதைனைகள் விலக்கப்பட்டன. அதனால், பல தவறுகளை இன்றைக்கு சந்தித்து வருகிறோம். மாணவா் பருவத்திலேயே, திருமுறைகளையும், அருளாளா்களுடைய பாடல்களையும், நாயன்மாா்கள் வரலாற்றையும் மாணவா்கள் படித்து தோ்ந்தால், அந்த நாடு சுபிட்சமாக இருக்கும். இளையோரிடம் திருமுறைகளை எடுத்துச் செல்லும் வகையில், செயலி வடிவில் கொண்டுவந்துள்ளோம் என்றாா் அவா்.

இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமசாரிய சுவாமிகள், ரசிக ரஞ்சனி சபா தலைவா் ஏ.ஆா்.சந்தான கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சேக்கிழாா் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஜெகதீசன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments