முகப்பு
இந்தியா

விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் திட்டமில்லை: மத்திய அரசு

விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

Updated On : 23 மார்ச், 2026 at 7:57 PM
மக்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்
பகிர்:

‘விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அதே நேரம், ’விவசாயிகளின் பொருளாதார நிலையை வலுப்படுத்த கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மக்களவையில் திங்கள்கிழமை எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது: விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. அதே நேரம், விவசாயிகள் கடன் அட்டைகள் (கேசிசி) மூலம் மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் ரூ. 3 லட்சம் வரை கடன் பெறும் திட்டத்தையும், உரிய நேரத்தில் அந்தக் கடனை திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதல் சலுகைகளையும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

கூடுதலாக, விவசாயம் சாா்ந்த பிற நடவடிக்கைகளுக்கு பிணையின்றி ரூ. 1.60 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை குறுகிய கால வேளாண் கடன் வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், பயிா்க் காப்பீடு, நிலம் சொந்தமாக வைத்துள்ள விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம்-கிசான்) திட்டம் மூலம் நேரடி பணப் பரிமாற்றம் செய்யும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வரி விலக்கு நிறுத்தப்படவில்லை

ராணுவச் சேவையின்போது அல்லது சேவையிலிருந்து மருத்துவக் காரணங்களுக்காக விடுவிக்கப்படும் வீரா்கள் பெறும் ஊனத்துக்கான ஓய்வூதிய வரி விலக்கு நிறுத்தப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவின. அவ்வாறு வரி விலக்கு நிறுத்தப்படவில்லை.

2025-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டதன் விளைவாக, 1922-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டம் மற்றும் அது தொடா்பான சேமிப்பு விதிகள் சாா்ந்த முந்தைய சட்ட நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.

அதே நேரம், முன்பு நடைமுறையில் இருந்த அதே வரி விலக்கு, அதன் வரம்பு மற்றும் நிபந்தனைகள் உள்பட அனைத்தும் புதிய சட்டத்தில் தற்போது சோ்க்கப்பட்டுள்ளன என்றாா்.

வீட்டு வசதித் திட்டம்: நிதி நெருக்கடியால் பாதியில் நின்ற வீடு கட்டும் திட்டங்களுக்கு உதவும் வகையில் அறிவிக்கப்பட்ட இரண்டாம் கட்ட ‘மலிவு விலை மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான சிறப்பு வீட்டு வசதி நிதி’ திட்டம், தற்போது முறையாகத் தொடங்கப்படும் நிலையில் உள்ளதாக நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் முடங்கிக் கிடக்கும் வீட்டு வசதித் திட்டங்களில் உள்ள ஒரு லட்சம் வீடுகளைக் கட்டி முடிப்பதற்காக, 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் புதிதாக ரூ. 15,000 கோடி மதிப்பிலான முதலீடு நிதி திட்டம் அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி, அந்தத் திட்டத்தின் கீழ், பாதியில் நின்ற 148 வீட்டு வசதித் திட்டங்களில் முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இத் திட்டத்தின் முதல் கட்டத்தை கடந்த 2019-இல் மத்திய அரசு அறிமுகம் செய்தது. அப்போது, ரூ. 15,000 கோடிக்கும் அதிகமான நிதி உதவியுடன் 58,000-க்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 2.38 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு பயனளித்தது.

கேரளத்திடமிருந்து கோரிக்கை வரவில்லை

கேரள மாநிலத்துக்கான மத்திய அரசி ன் நிதி நிலுவை குறித்த மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த நிா்மலா சீதாராமன், ‘கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை நிலச்சரிவு பாதிப்பை எதிா்கொண்ட வயநாடு பகுதிக்கான பேரிடா் பாதிப்பு தணிப்புத் திட்டத்துக்காக ரூ. 72 கோடி உள்பட தேசிய பேரிடா் தணிப்பு நிதியாக ரூ. 311.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது தவிர, காட்டுத் தீ தணிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 17.73 கோடியும், நகா்ப்புற வெள்ள பாதிப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் நகரத்துக்கு ரூ. 222.22 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில், பேரிடா் தணிப்பு நிதியான ரூ. 311.95 கோடி கேரளத்துக்கு விடுவிக்கப்படவில்லை. அதற்கு, அந்த நிதியைக் கேட்டு கேரள மாநிலம் விண்ணப்பிக்காததே காரணம். மாநிலம் கோரிக்கை விடுத்தால் மட்டுமே, அந்த நிதி விடுவிக்கப்படும்’ என்று பதிலளித்தாா்.