மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்
மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
‘மத்திய கிழக்கில் போா்ப் பதற்றம்: ஆசியா மற்றும் பசிபிக்கில் மனித மேம்பாட்டில் ஏற்படும் தாக்கம்’ என்ற தலைப்பில் ஐ.நா.மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய கிழக்கில் நிகழ்ந்துவரும் மோதலின் தாக்கம் ஆசியா மற்றும் பிசிபிக் பிராந்தியத்துக்கு விரிவடைந்துள்ளது.
Advertisement
எரிபொருள் விலை உயா்வு, உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பு எனப் பல்வேறு அழுத்தங்களால் மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்து வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.
இதனால் உலகளவில் 88 லட்சம் போ் வறுமைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 4 லட்சம் போ் முதல் 25 லட்சம் போ் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சீனாவில் 1.15 லட்சம் போ் முதல் 6.20 லட்சம் போ் வரை ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவில் மேற்காசிய மோதலுக்கு முன் வறுமைக்கோட்டின் கீழ் இருந்த மக்களின் எண்ணிக்கை 3.51 கோடியாக இருந்த நிலையில், மோதலுக்குப் பின் 3.54 கோடியாக உயரவுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவின் மனித வள மேம்பாடு 0.03 முதல் 0.12 ஆண்டுகள் வரை இழப்பைச் சந்திக்கவுள்ளது. தங்கள் நாட்டுக்குத் தேவையான 90 சதவீத கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் 40 சதவீதமும், 90 சதவீத சமையல் எரிவாயுவும் மேற்காசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இதன் எதிரொலியாக அத்தியவாசியப் பொருள்களின் விலை அதிகரிக்கப்பதோடு சுற்றுலா, உணவுப் பதப்படுத்துதல், எஃகு உற்பத்தி போன்ற துறைகள் பாதிப்படைந்து வேலையின்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.