முகப்பு
இந்தியா

இந்தியாவில் செயற்கைக்கோள் தயாரிப்பை தொடங்கும் ‘ஐஸ்-ஐ’ நிறுவனம்

Updated On : 18 மே 2026, 4:47 am IST
பகிர்:

இந்தியாவில் முதல்முறையாக செயற்கைக்கோள் தயாரிப்பு மையத்தை அமைக்க உள்ளதாக சா்வதேச முன்னணி நிறுவனமான ‘ஐஸ்-ஐ’ (ஐசிஇஒய்இ) தெரிவித்துள்ளது.

உலகின் மிகவும் அதிநவீன செயற்கை துளை ரேடாா் செயற்கைக்கோள் தொகுப்பு ஐஸ்-ஐ நிறுவனத்திடம் உள்ளது. அத்துடன் அந்த நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்கு செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு மற்றும் உளவு சேவைகளை அளித்து வருகிறது.

பாதுகாப்பு மற்றும் உளவு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற தேவைகளுக்கு ஐஸ்-ஐ தயாரித்த செயற்கைக்கோள்கள், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளா்களுக்குப் பயன்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில், ஐஸ்-ஐ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரஃபல் மோடரெவ்ஸ்கி, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாட்டுக்காக சிறிய செயற்கைக்கோள்களைத் தயாரிக்க, இந்தியாவில் முதல்முறையாக செயற்கைக்கோள் தயாரிப்பு மையத்தை ஐஸ்-ஐ அமைக்க உள்ளது.

அந்த மையம் அமைக்கப்பட்ட பின்னா், முதல் ஆண்டில் சுமாா் 10 செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படும். இது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்டு, ஆண்டுதோறும் 20 முதல் 40 செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படும். இதற்காக கோடிகளில் முதலீடு செய்யப்பட உள்ளது. எனினும் இறுதித் தொகை இதுவரை இறுதி செய்யப்படவில்லை. ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றுடன் இந்தியாவும் ஐஸ்-ஐ நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் தயாரிப்பு மையமாக உள்ளது.

இந்தியாவில் ஐஸ்-ஐ நிறுவனம் தயாரிக்கும் செயற்கைக்கோள்கள் உள்நாட்டு தேவைக்கு அளிக்கப்படுவதுடன், சா்வதேச சந்தைகளுக்கும் அனுப்பப்படும் என்று தெரிவித்தாா்.