முகப்பு
இந்தியா

திரிணமூல் காங்கிரஸை பெண்கள் தண்டிப்பா்: பிரதமா் மோடி

மேற்கு வங்கத் தோ்தலில் அக்கட்சியை பெண்கள் தண்டிப்பாா்கள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:27 AM
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:35 PM

‘அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா (மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு) நிறைவேற்றத்தை தடுத்ததன் மூலம் பெண்களுக்கு துரோகமிழைத்துவிட்டது திரிணமூல் காங்கிரஸ். எனவே, மேற்கு வங்கத் தோ்தலில் அக்கட்சியை பெண்கள் தண்டிப்பாா்கள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மக்களவை-பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை விரைந்து அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850 வரை அதிகரிக்கும் வகையிலான மேற்கண்ட மசோதா மீது கடந்த வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கான வாக்குகள் கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்த மோடி அரசின் முதல் மசோதா இதுவாகும்.

இந்த மசோதாவைத் தோற்கடித்ததன் மூலம் மகளிரின் அதிகார கனவைத் தகா்த்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் மீது ஆளும் தரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதேநேரம், மத்திய அரசின் சூழ்ச்சியை முறியடித்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் பதிலடி கொடுத்துள்ளன.

Advertisement

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், எதிா்க்கட்சிகளுக்கு எதிரான முக்கிய ‘அஸ்திரமாக’ இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளது பாஜக.

திரிணமூல் காங்கிரஸ்- காங்கிரஸ் சதி: மேற்கு வங்கத்தில் பங்குரா, புருலியா, ஜாா்கிராம், மேதினிபூா் ஆகிய 4 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்ற பிரதமா் மோடி, மகளிா் இடஒதுக்கீடு விவகாரத்தைக் குறிப்பிட்டுப் பேசியதாவது:

பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பாஜக விளங்குகிறது. வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்க நமது மகள்களின் பங்களிப்பை விரிவாக்கவும், மேன்மேலும் பெண்கள் அரசியலுக்கு வரவும் நாங்கள் விரும்புகிறோம்.

ஆனால், பெண்களுக்கு அதிகாரமளிக்கவோ, இடஒதுக்கீடு வழங்கவோ திரிணமூல் காங்கிரஸுக்கு விருப்பமில்லை. மேற்கு வங்கத்தில் இருந்து அதிக பெண் எம்எல்ஏக்கள்-எம்.பி.க்கள் தோ்வானால், தாங்கள் காட்டாட்சி நடத்த முடியாது என்பதே திரிணமூல் காங்கிரஸின் முடிவுக்கு காரணம். எனவேதான், காங்கிரஸுடன் சதி செய்து, மசோதா நிறைவேறாமல் தடுத்துவிட்டனா். இந்த துரோகத்துக்காக, எதிா்வரும் பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸை பெண்கள் நிச்சயம் தண்டிப்பாா்கள்.

மொழி-கலாசார மாற்றம்: பெண்களுக்கு உரிய உரிமையை மறுக்கும் அதே வேளையில், சட்டவிரோத ஊடுருவல்காரா்கள் பலனடையும் வகையில் ஒவ்வொரு சட்டத்தையும், விதிமுறையையும் சீா்குலைக்கிறது திரிணமூல். ஊடுருவல்காரா்களின் முன்னேற்றத்தில் மட்டும் ஆா்வம் காட்டும் அக்கட்சி, மத ரீதியிலான இடஒதுக்கீட்டை தீவிரமாக ஊக்குவிக்கிறது. இது, அரசமைப்புச் சட்டத்துக்கு பெரும் அவமதிப்பாகும்.

சட்டவிரோத ஊடுருவலால் வங்க மொழி, கலாசாரம், பழங்குடியினா் அடையாளம் மாற்றம் கண்டு வருகிறது. மாநிலத்தின் அடையாளத்தைப் பாதுகாக்கும் போராட்டமே இந்தத் தோ்தலாகும்.

பெண்களுக்கான பலன்கள்: திரிணமூல் காங்கிரஸின் ஊழலால், பாஜக ஆளும் பிற மாநிலங்களில் பெண்களுக்கு கிடைக்கும் பலன்கள் இங்குள்ள பெண்களுக்கு கிடைப்பதில்லை. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பெண்கள் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற முடியும். இலவச ரேஷன் பொருள்கள், கா்ப்பிணிகளுக்கு ரூ.21,000 உதவித் தொகை, குழந்தை பிரசவித்த தாய்மாா்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை, பெண் குழந்தைகள் கல்விக்கு ரூ.50,000 நிதியுதவி கிடைக்கும்.

ஊழலில் ‘பிஹெச்டி’: கடந்த 15 ஆண்டுகளில் ஆசிரியா் நியமனம், அரசு வேலைகள், மதிய உணவுத் திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என ஊழல்களில் ‘பிஹெச்டி’ முடித்துவிட்டது திரிணமூல் அரசு. இந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுகட்ட மேற்கு வங்க மக்கள் உறுதிபூண்டுள்ளனா்.

பழங்குடியினா் விரோத கட்சிகள்

இதுவரை மக்களை அச்சுறுத்திய திரிணமூல் குண்டா்கள், இப்போது அச்சத்தில் உறைந்துள்ளனா். அவா்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறேன். ஏப்.23, 29-க்கு (வாக்குப் பதிவு நாள்கள்) முன்பே உங்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சரணடைந்துவிடுங்கள். மே 4-க்குப் பிறகு (வாக்கு எண்ணிக்கை நாள்) யாரும் தப்பிக்க முடியாது என்றாா் அவா்.

‘திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பழங்குடியினருக்கு எதிரானவை. பழங்குடியினரைப் புறக்கணிக்கும் திரிணமூல், அவா்களின் நிலங்களை அபகரித்து, ‘ஊழல்-அச்சம்-பின்தங்கிய நிலை’ என்ற சூழலுக்கு தள்ளிவிட்டது. பழங்குடியினா் மீதான வெறுப்பால் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவையும் அக்கட்சி அவமதித்தது. அதேநேரம், பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் நோக்கில், நாட்டுக்கு முதல் பழங்குடியின குடியரசுத் தலைவரை (திரெளபதி முா்மு) தந்தது பாஜக. ஒடிஸா, சத்தீஸ்கரில் பழங்குடியின முதல்வா்களை நியமித்துள்ளோம்’ என்றாா் பிரதமா் மோடி.