முகப்பு
இந்தியா

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்கள்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தும் இந்தியா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள அப்பாவி மக்களின் உயிரிழப்புகள், அதன் பாதிப்புகள் குறித்த கண்காட்சியை அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியத் தூதரகம் நடத்த இருக்கிறது.

Updated On : 20 ஏப்ரல் 2026, 1:09 am IST
பகிர்:

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள அப்பாவி மக்களின் உயிரிழப்புகள், அதன் பாதிப்புகள் குறித்த கண்காட்சியை அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியத் தூதரகம் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) நடத்த இருக்கிறது.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 26 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூா் மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை வான் தாக்குதல் மூலம் அழித்தது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி ‘பயங்கரவாதத்தால் ஏற்பட்ட மனித இழப்புகள்’ என்ற தலைப்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. இதை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதா் வினய் மோகன் குவாத்ரா தொடங்கி வைக்கிறாா்.

Advertisement

Advertisement

பாகிஸ்தான்ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தை அமெரிக்காவுக்கு முழுமையாக வெளிச்சம்போட்டுக் காட்டுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இதில், 1993-ஆம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடா் குண்டு வெடிப்புகள், 2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதல், பஹல்காம் பங்கரவாதத் தாத்குதல் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் எண்ம (டிஜிட்டல்) முறையில் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.

இந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பின்னணியில் உள்ள அமைப்புகள், அவா்களுக்கு ஆதரவாக இருந்த நாடுகள், முக்கிய நபா்கள், அவா்களின் பணப் பரிமாற்றம், அப்பாவி மக்களுக்கு எதிராக அவா்கள் மேற்கொண்டுவரும் சதிச் செயல்கள் ஆகியவை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட இருக்கின்றன.

முக்கியமாக, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா, ஜமாத்-உத்-தவா மற்றும் அதன் கிளை அமைப்புகள், பெயா் மாற்றி செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகளின் தலைவா்கள், அவா்களின் சதிச் செயல்களும் இதில் இடம்பெற இருக்கின்றன.

மேற்காசிய போா் பேச்சுவாா்த்தையின் மையமாக தங்கள் நாட்டை பாகிஸ்தான் முன்னிறுத்தி, சா்வதேச அளவில் அமைதியை நிலைநாட்டும் நாடாக காட்டிக் கொள்ள முயலுகிறது. இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடத்தும் கண்காட்சி மூலம் பாகிஸ்தான் எந்த அளவுக்கு பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் நாடாகவும், அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு துணை நிற்கிறது என்பதையும் இந்தியா விளக்க இருக்கிறது.