சமஸ்கிருதம் வெறும் மொழி மட்டுமல்ல.. தேசத்தின் உயிர்நாடி: மோகன் பாகவத்
சமஸ்கிருதத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக..
நாட்டில் சமஸ்கிருதத்தைப் பரவலாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தினார்.
சமஸ்கிருத பாரதி அமைப்பின் புதிதாகக் கட்டப்பட்ட மத்திய அலுவலக திறப்பு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு உரையாற்றினார்.
சமஸ்கிருதத்தின் பயன்பாடு அதிகரிப்பது, மற்ற அனைத்து இந்திய மொழிகளையும் செழுமைப்படுத்தி அவற்றுக்கிடையே பாலமாகச் செயல்படுவது மட்டுமல்லாமல், மக்களைத் தொன்மையான சிந்தனைகள், கலாசாரத்துடனும் இணைக்கும்.
Advertisement
Advertisement
பாரதம் என்ற பெயரின் சாரம் வெறும் புவியியல் சார்ந்ததல்ல, அது தனித்த அரசியல்-பொருளாதார அமைப்பும் அல்ல.. பாரதம் என்பது ஒரு மரபு, வாழ்க்கை தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதற்கான ஒரு அடித்தளம். பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள உயிரினங்கள் மற்றும் உயிரற்ற கூறுகளையும் உள்ளடக்கி, வாழ்க்கையைத் தாங்கி நிற்கும் ஒரு மரபாகும்.
உலகிற்கு இந்த மரபின் தேவை எப்போதும் இருந்து வருகிறது. இந்தத் தேவையை நிறைவேற்றுவதே, தங்களை இந்தியர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளும் அனைவரின் கடமையாகும். இதற்காகப் பாரதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இவையெல்லாம் நிகழ வேண்டுமென்றால், இந்தியாவைப் புரிந்து கொள்வதற்குச் சமஸ்கிருதத்தைப் புரிந்து கொள்வது மிக அவசியமாகும். இந்தியா எண்ணற்ற மொழிகளுக்குத் தாயகமாகத் திகழ்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், தனக்கே உரியத் தனித்துவத்துடன், தேசிய மொழியாகவே விளங்குகிறது.
இந்த மாறுபட்ட தேசிய மொழிகள் அனைத்தையும் இணைக்கும் இணைப்பு என்றால் அதுவே சமஸ்கிருதம். நாட்டில் சமஸ்கிருதத்தை அதிகளவில் முன்னெடுத்துச் செல்ல முயற்சிகளை மேற்கொள்ளுமாறு 'சமஸ்கிருத பாரதி' அமைப்பிற்கு மோகன் பாகவத் அழைப்பு விடுத்தார். இதுதொடர்பான பணிகள், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் சமஸ்கிருதத்தில் உரையாடக்கூடிய நிலையை அடையும் அளவிற்கு முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார்.
சமஸ்கிருதம் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. இந்தியாவைப் பொறுத்தவரை, சமஸ்கிருதமே தேசத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது. ஏனெனில் சிந்தனை, வாழ்க்கை கலாசாரம் ஆகியவற்றில் இன்றும் உயிர்ப்புடன் திகழும் மிகவும் தொன்மையான மரபாக இந்தியாவே விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.