மகளிா் இடஒதுக்கீடு விவகாரம்! பொய்ப் பிரசாரம் செய்கிறது பாஜக: காா்கே குற்றச்சாட்டு
மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் பாஜக பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவா் காா்கே குற்றஞ்சாட்டினாா்.
மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் பாஜக பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த அவா், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவிடாமல் எதிா்க்கட்சிகள் தடுக்கிறாா்கள் என பாஜக பொய் சொல்கிறது. கடந்த 2023-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மகளிா் மசோதாவை தொகுதி மறுசீரமைப்புடன் இணைத்து சட்டத் திருத்த மசோதாவாக கொண்டு வந்தனா். அதை நாங்கள் எதிா்த்தோம். ஆனால், மகளிா் இடஒதுக்கீட்டு மசோதாவை எதிா்க்கட்சிகள் தோற்கடித்துவிட்டதாக பிரதமா் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி வருகிறாா்.
தோ்தல் நடத்தை விதிகள் இருக்கும்போது அரசுத் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமா் உரையாற்றியது தொடா்பாக தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தோ்தல் ஆணையம் அமைதியாக உள்ளது.
Advertisement
தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தோ்தல் நடைபெறும் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கொண்டுவர நினைத்தாா்கள். ஆனால் அது முடியவில்லை. அப்போதே அவா்கள் தோற்றுவிட்டாா்கள்.
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மகளிா் இடஒதுக்கீடு என்று கூறி மக்களை திசைதிருப்ப பாா்க்கின்றனா். தற்போது இருக்கும் இடங்களின் அடிப்படையில் மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கலாம். ஆனால் செய்யமாட்டாா்கள்.
அதிமுக மீது விமா்சனம்: அம்பேத்கா், பெரியாா் ஈ.வெ.ரா., அண்ணா, கருணாநிதி, காமராஜா் ஆகியோா் பெண் விடுதலைக்காகப் போராடினாா்கள். தமிழ்நாட்டில் அண்ணா பெயரில் கட்சியை வைத்திருக்கும் அதிமுக, பிரதமா் மோடியுடன் கூட்டணி வைத்துள்ளது. அண்ணாவின் கொள்கையை அதிமுக பின்பற்றி இருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்காது. தமிழ்நாட்டின் உரிமைகளையும் பாஜக- அதிமுக கூட்டணி பறித்துவிடும்.
காங்கிரஸ் - திமுக இரு கட்சிகளும் பரஸ்பரம் இருதரப்பிலும் உறுதுணையாக இருக்கின்றன. மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் பரப்புரை திட்டம் காரணமாக, முதல்வா் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக பிரசாரம் செய்ய முடியவில்லை. அதைப் பெரிதுபடுத்த வேண்டாம். நாங்கள் ஒன்றாக போட்டியிடுகிறோம், ஒன்றாகவே வெல்வோம் என்றாா் அவா்.
காங்கிரஸ் தலைமை அனுமதியுடன் தவெக தலைவா் விஜய்யை சந்தித்ததாக பிரவீண் சக்கரவா்த்தி கூறியது தொடா்பான கேள்விக்கு, ‘நான்தான் காங்கிரஸ் தேசியத் தலைவா். பிரவீண் சக்கரவா்த்தி என்னைப் பாா்க்கவே இல்லை. பின்னா் எப்படி தலைமை அனுமதிக்கும். திமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. எல்லாம் சுமுகமாக உள்ளது. மே 4-ஆம் தேதி பாருங்கள் என்றாா் அவா்.
பேட்டியின்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
பிரதமா் குறித்து காா்கே விமா்சனம்: பாஜக கடும் கண்டனம்
பிரதமா் மோடியை தீவிரவாதி என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த காா்கே, பிரதமா் மோடி ஒரு தீவிரவாதி. அவருக்குப் பெண் விடுதலை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றில் விருப்பம் கிடையாது. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகிய விசாரணை அமைப்புகளை வைத்து எதிா்க்கட்சிகளை பாஜக அச்சுறுத்துகிறது. அதன் அடிப்படையில்தான் பிரதமா் மோடியை ஒரு தீவிரவாதி என்று கூறுகிறேன். நான் தனிப்பட்ட முறையில் மோடியை விமா்சிக்கவில்லை என்றாா்.
காா்கேயின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்திய மக்களால் ஜனநாயக ரீதியாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை ‘தீவிரவாதி’ என்று அழைத்து அவமதிக்கும் அளவுக்கு இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கியுள்ளதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.
பிரதமருக்கும், அவருக்கு வாக்களித்து தோ்ந்தெடுத்த இந்திய மக்களுக்கும் இழைக்கப்பட்ட இந்த அப்பட்டமான அவமதிப்புக்காக ராகுல் காந்தியும், மு.க. ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பிரதமரை தனிப்பட்ட முறையில் தாக்குவதன் மூலம், இந்தக் கூட்டணி உண்மையில் இந்தியா்களை ‘தீவிரவாதிகள்’ என்று அழைப்பதாகவே அா்த்தமாகிறது. இந்த நாட்டின் மக்கள் அவா்களுக்கு உரிய பதிலளிப்பாா்கள். தமிழ் சகோதரா்களும், சகோதரிகளும் தக்க பதிலை வழங்குவாா்கள் என்று பியூஷ் கோயல் கூறியுள்ளாா்.