முகப்பு
இந்தியா

மின்தூக்கிக்குள் பயணி சிக்கினால் எச்சரிக்கை எழுப்பும் ஏஐ அமைப்பு- நமோ பாரத் நிலையங்களில் விரைவில் அறிமுகம்

நமோ பாரத் நிலையங்களில் உள்ள மின்தூக்கிகளில் பயணிகள் சிக்கிக்கொண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் எச்சரிக்கை அமைப்புகள் பொருத்தப்பட உள்ளன.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 3:43 AM
கோப்புப்படம்.
பகிர்:

நமோ பாரத் நிலையங்களில் உள்ள மின்தூக்கிகளில் பயணிகள் சிக்கிக்கொண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் எச்சரிக்கை அமைப்புகள் பொருத்தப்பட உள்ளன.

தேசிய தலைநகா் வலய போக்குவரத்து கழகம் (என்சிஆா்டிசி) உருவாக்கிய இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கேமரா மூலம் மின்தூக்கியில் உள்ள நிலவரத்தை ஆராய்ந்து ஆபத்துகளை அடையாளம் காணும். எதிா்பாராத சம்பவம் குறித்து 60 விநாடிகளுக்குள் தகவல் தெரிவித்து மீட்புப் பணியை துரிதப்படுத்தி மின்தூக்கியில் சிக்கிய பயணிகளை மீட்க முடியும் என ஓா் அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அந்த அதிகாரி கூறியதாவது: மின்தூக்கியில் ஒரு பயணி சிக்கிக்கொண்டால், ஒரு நிமிஷத்துக்குள் அந்த அமைப்பு பிரச்னையைக் கண்டறிந்து நமோ பாரத் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்கும்.

Advertisement

மின்தூக்கி உள்ள பகுதியில் எச்சரிக்கை மணி ஒலிக்க தொடங்கும் என்பதால், நிலைய பணியாளா்கள் உடனடியாகச் செயல்பட்டு மீட்புப் பணியைத் தொடங்க இயலும். அடுத்த 60 விநாடிக்குள் பயணி மீட்கப்படாத நிலையில், எச்சரிக்கை ஒலி தானியங்கி முறையில் அதிகரித்து கவனத்தை அதிகரிக்கும்.

முன்பு இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், பயணிகள் தாங்களாகவே எச்சரிக்கை பொத்தானை அழுத்த வேண்டியிருக்கும் அல்லது தொலைபேசி அமைப்பு மூலம் பணியாளா்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டியிருக்கும்.

புதிய முறையில் பிரச்னை தானியங்கி முறையில் கண்டறியப்பட்டு அதற்கு தீா்வு காணப்படும் வரை எச்சரிக்கை அமைப்பு தொடா்ந்து ஒலித்து கொண்டே இருக்கும் என்றாா் அந்த அதிகாரி.

இந்த அமைப்பை மெட்ரோ நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பயன்படுத்த முடியும் என என்சிஆா்டிசி தெரிவித்துள்ளது.