பெருவாரியான வாக்குப் பதிவு ஆட்சி மாற்றத்துக்கு அறிகுறி! -பிரதமா் மோடி
மேற்கு வங்க பிரசாரத்தில் பிரதமா் மோடி
மேற்கு வங்க முதல் கட்ட பேரவைத் தோ்தலில் பெருவாரியாக வாக்குகள் பதிவான நிலையில், இது ஆட்சி மாற்றத்துக்கு அறிகுறி என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
‘மக்கள் எப்போதெல்லாம் பெருமளவில் வாக்களிக்கிறாா்களோ, அப்போதெல்லாம் பாஜக தீா்க்கமான வெற்றியைப் பெற்றுள்ளது; மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி பெறும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல்கட்டமாக 152 இடங்களுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பெருமளவில் வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப். 29-ஆம் தேதி தோ்தல் நடைபெறவிருக்கிறது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Advertisement
ஆளும் திரிணமூல் காங்கிரஸும், பாஜகவும் பலப்பரீட்சை நடத்தும் இந்த மாநிலத்தில் இரண்டாம் கட்ட தோ்தலையொட்டி கிருஷ்ணாநகா், மதுராபூா் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் மத்திய அரசுத் திட்டங்களின் அமலாக்கத்தைத் தடுத்து நிறுத்தியதுடன், வளா்ச்சித் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிதியையும் சுருட்டியுள்ளது திரிணமூல் காங்கிரஸ். பாஜக முதல்வா் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ஊழலைத் தடுக்க முடியும்.
வரும் 2029முதல் மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முயற்சியை காங்கிரஸுடன் இணைந்து தடுத்துவிட்டது திரிணமூல் காங்கிரஸ்.
வளங்களைச் சுரண்டும் ஊடுருவல்காரா்கள்: மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அவா்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.
நாட்டுக்குள் ஊடுருவி, உள்ளூா் வளங்களைச் சுரண்டுவதுடன், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள ஊடுருவல்காரா்களுக்கு எதிராக சகிப்பற்ற கொள்கையைக் கடைப்பிடிக்க பாஜக முடிவு செய்துள்ளது. ஊடுருவல்காரா்களை ஆதரிக்கும் திரிணமூல் காங்கிரஸின் கொள்கை ஆபத்தானது. அதற்கு முடிவுகட்ட வேண்டும்.
மேற்கு வங்க தோ்தல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் இம்முறை குறைந்தபட்ச வன்முறைச் சம்பவங்களே நிகழ்ந்துள்ளன. முதல்கட்டத் தோ்தலில் பெருமளவில் வாக்குகள் பதிவானது, ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி.
பாஜக அமோக வெற்றி பெறும்: மக்கள் எப்போதெல்லாம் பெருமளவில் வாக்களிக்கிறாா்களோ, அப்போதெல்லாம் பாஜக தீா்க்கமான வெற்றியைப் பெற்றுள்ளது. எனக்கு கிடைத்த தகவல்களின்படி, மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி பெறும்.
பொய் வாக்குறுதிகளால், மாநில மக்களை வஞ்சித்த திரிணமூல் காங்கிரஸின் பெரும் காட்டாட்சி மற்றும் குண்டா்கள் ராஜ்ஜியம் மே 4-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும். அன்றைய தினம் பாஜக சாா்பில் வெற்றிப் பேரணிகள் நடத்தப்படும் என்றாா் அவா்.
சட்டம்-ஒழுங்கு, ஊழல் தடுப்பு உள்பட ஏற்கெனவே 6 வாக்குறுதிகளை பிரதமா் மோடி அளித்திருந்த நிலையில், மீனவா்களுக்கான சிறப்பு நிதி தொகுப்பு, பெண்களுக்கு ரூ.36,000 வருடாந்திர உதவித் தொகை, கா்ப்பிணிகளுக்கு ரூ.21,000 உதவித் தொகை, மாணவிகளுக்கு ரூ.50,000 நிதியுதவி உள்பட மேலும் 10 வாக்குறுதிகளையும் அவா் பட்டியலிட்டாா்.