ஆஜராக முடியாது! கேஜரிவாலை தொடர்ந்து மணீஷ் சிசோடியாவும் நீதிபதிக்கு கடிதம்!
கேஜரிவாலை தொடர்ந்து மணீஷ் சிசோடியாவும் நீதிபதிக்கு கடிதம் எழுதியது பற்றி...
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மாவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் ஜேஹரிவாலைத் தொடர்ந்து அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவும் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அவர் முன்னிலையில் நடைபெறும் விசாரணைக்கு தான் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகப் போவதில்லை என சிசோடியாவும் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 27 அன்று, தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் கேஜரிவால், சிசோடியா மற்றும் பிறரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. சிபிஐயின் வழக்கு நீதித்துறை ஆய்வில் தாக்குப்பிடிக்க இயலாமல், முழுமையாகவே நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று அது கூறியது.
Advertisement
Advertisement
இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மாவுக்கு எதிராக கேஜரிவால் பல ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தாா். அவற்றுள், தனது கைதுக்கு எதிராக அவா் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி முன்னதாக நிவாரணம் மறுத்ததும், மணீஷ் சிசோடியா மற்றும் கே. கவிதா உள்ளிட்ட மற்ற குற்றம்சாட்டப்பட்டவா்களின் பிணை மனுக்கள் மீது நிவாரணம் வழங்க மறுத்ததும் அடங்கும்.
கேஜரிவாலைத் தவிர, ஆம் ஆத்மி கட்சி தலைவா்களான சிசோடியா மற்றும் துா்கேஷ் பதக் ஆகியோரும் நீதிபதியை இந்த வழக்கிலிருந்து விலக்கக் கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்களை நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா நிராகரித்து, அவா்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டாா். மேலும், வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி ஸ்வரணாவை விலகக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை நீதிபதி ஸ்வரணாவுக்கு எழுதிய கடிதத்தில், உங்களிடம் இருந்து நீதி கிடைக்கும் என்ற எனது நம்பிக்கை தகர்ந்துவிட்டது. உங்கள் முன் விசாரணைக்கு நேரிலோ, வழக்கறிஞர் மூலமோ ஆஜராக மாட்டேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை மணீஷ் சிசோடியாவும் ’ஆஜராக முடியாது’ என்று நீதிபதி ஸ்வரணாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தைப் பகிர்ந்து எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
”நீதிபதி ஸ்வரணா முன்பாக நடைபெற்று வரும் இவ்வழக்கின் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஆஜராக எனது மனசாட்சி என்னை அனுமதிக்கவில்லை என்று அக்கடிதத்தில் நான் கோரியுள்ளேன்.
நீதித்துறை மீதும் இந்திய அரசியலமைப்பு மீதும் நான் கொண்டுள்ள நம்பிக்கை, எவ்விதத்திலும் அசைக்கப்படாமல் முழுமையாக நிலைத்திருக்கிறது என்பதையும் நான் இத்தருணத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இருப்பினும், என் மனதில் ஆழ்ந்த கேள்விகள் எழுந்துவரும் நிலையில், வெறும் சம்பிரதாயத்திற்காக மட்டும் இவ்வழக்கு நடவடிக்கைகளில் பங்கேற்பது எனக்கு உகந்ததல்ல.
ஆகவே, சத்தியாகிரகத்தைத் தவிர வேறு எவ்வழியும் எனக்கு இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் சென்று கேஜரிவாலும் சிசோடியாவும் மரியாதை செலுத்தினர்.
Unable to Appear! Following Kejriwal, Manish Sisodia Also Writes to the Judge!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.