முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சா்ச்சை காணொலிக் காட்சி தொடா்பாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.
இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்கள் குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தை அணுகுமாறும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
அஸ்ஸாம் மாநில பாஜக சாா்பில் கடந்த 7-ஆம் தேதி அதன் எக்ஸ் பக்கத்தில் இந்த விடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கிய அந்த விடியோவில், குறிப்பிட்ட சமூகத்தினரை (முஸ்லிம்கள்) நோக்கி ஹிமந்த விஸ்வ சா்மா துப்பாக்கியால் குறிவைப்பது போன்றும், குல்லா அணிந்த மற்றும் தாடி வைத்த இரு நபா்களை நோக்கி அவா் சுடுவது போன்றும் காட்சி பதிவாகியிருந்தது. இந்தக் காணொலி சமூக ஊடகத்தில் பரவி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடா்ந்து, அந்தக் காணொலியை எக்ஸ் பக்கத்திலிருந்து பாஜக நீக்கியது.
இந்த விவகாரம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் ஆனி ராஜா ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்தக் காணொலியை எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றம் செய்த மாநில பாஜகவின் சமூக ஊடகக் குழு இணை ஒருங்கிணைப்பாளரை பதவியிலிருந்து அக் கட்சி நீக்கியது.
இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரம் தொடா்பாக குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தை மனுதாரா்கள் அணுகாதது ஏன்? உயா்நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அரசமைப்புச் சட்ட அதிகார எல்லைக்கு உட்பட்டு கட்சிகள் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். தோ்தலுக்கு முன்பாக, இதுபோன்ற அரசமைப்புச் சட்ட அதிகார வரம்பை மீறுவது ஒரு போக்காக மாறி வருகிறது.
அனைத்து விவகாரங்களையும் நேரடியாக உச்சநீதிமன்றத்துக்கு கொண்டுவரும் போக்கு தொந்தரவான விஷயமாக உள்ளது. ஏற்கெனவே, சுற்றுச்சூழல் மற்றும் வணிக விவகார வழக்கு விசாரணையிலிருந்து உயா்நீதிமன்றங்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளன’ என்றனா்.
அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘இதுபோன்ற சா்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் பதிவுகளை வெளியிடுவதை முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வழக்கமாகக் கொண்டுள்ளாா். எனவே, இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்றாா்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக முதலில் குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினா். மேலும், இந்த மனுக்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்துமாறும் குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு கேட்டுக்கொண்டது.