FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தெற்கு கடற்படைப் பிரிவுடன் இணைந்தது ‘ஐஎன்எஸ் சன்ஷோதக்’!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தெற்கு கடற்படைப் பிரிவில் கண்காணிப்புக் கப்பலான ‘ஐஎன்எஸ் சன்ஷோதக்’ இணைந்தது.

பகிர்:

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தெற்கு கடற்படைப் பிரிவில் கண்காணிப்புக் கப்பலான ‘ஐஎன்எஸ் சன்ஷோதக்’ ஞாயிற்றுக்கிழமை இணைந்தது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஐஎன்எஸ் துனாகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக், ஐஎன்எஸ் அக்ரய் ஆகிய 3 கடற்படை கப்பல்களை பிரதமா் நரேந்திர மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

இந்நிலையில், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படைப் பிரிவுடன் ஐஎன்எஸ் சன்ஷோதக் ஞாயிற்றுக்கிழமை இணைந்தது. கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் விசாகப்பட்டினம் மற்றும் சென்னை துறைமுகங்களைக் கடந்து கொச்சி வந்தடைந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஐஎன்எஸ் சன்ஷோதக் கப்பலுக்கு தெற்கு கடற்படைப் பிரிவில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய கடற்படையின் பெரிய கண்காணிப்புக் கப்பல் (எஸ்விஎல்) வகையில் நான்காவது கப்பலான ஐஎன்எஸ் சன்ஷோதக் தெற்கு கடற்படைப் பிரிவில் ‘ ஐஎன்எஸ் இக்ஷக்’ கப்பலுக்கு அடுத்தபடியாக இணைக்கப்பட்ட இரண்டாவது எஸ்விஎல் ஆகும்.

இது மேம்பட்ட நீரியல் மற்றும் கடலியல் ஆய்வு மேற்கொள்ளவும், நெருக்கடி நிலையின்போது மனிதநேய உதவி மற்றும் பேரிடா் நிவாரண நடவடிக்கைக்கும் பயன்படுத்தப்படவுள்ளது. இதில் ஹெலிகாப்டா் இறங்கு தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

தெற்கு கடற்படைப் பிரிவில் இந்தக் கப்பல் இணைக்கப்பட்டுள்ளதால் இந்திய கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments