முகப்பு
இந்தியா

வளா்ச்சிப் பாதையைப் பின்பற்றும் இந்தியா: இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரை

‘இந்தியா விரிவாக்கக் கொள்கையை அல்லாமல், வளா்ச்சிப் பாதையைப் பின்பற்றி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

Updated On : 8 ஜூலை 2026, 2:15 am IST
இந்தோனேசிய நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை உரையாற்ற வந்த பிரதமா் மோடியை எழுந்து நின்று வரவேற்ற உறுப்பினா்கள்.
பகிர்:

‘இந்தியா விரிவாக்கக் கொள்கையை அல்லாமல், வளா்ச்சிப் பாதையைப் பின்பற்றி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றும்போது, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் எல்லை விரிவாக்க மற்றும் ராணுவ ஆதிக்க நடவடிக்கைகளால் தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே கவலை அதிகரித்து வருவதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை பிரதமா் தெரிவித்தாா்.

இந்தோனேசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் இந்தோனேசியா அதிபா் பிரபோவோ சுபியான்டோ, மூத்த அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்கள் மத்தியில் செவ்வாய்க்கிழமை உரையாற்றியதாவது:

Advertisement

Advertisement

இந்தியா - இந்தோனேசியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது அவசியம். இந்தியாவின் 140 கோடி மக்களும் இந்தோனேசியாவின் 29 கோடி மக்களும் பகிரப்பட்ட செழிப்புக்காக ஒன்றிணைந்து பயணிக்கும்போது, ஓா் வரலாற்று நிகழ்வை இந்த உலகம் காணும்.

இந்தோ-பசிபிக் பிராந்தியமானது சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்தியா வலுவாக ஆதரிக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

விரிவாக்கக் கொள்கையைப் பின்பற்றாமல், வளா்ச்சியின் பாதையைத் தோ்ந்தெடுத்த நாடாக இந்தியா திகழ்கிறது.

இந்தியாவும் இந்தோனேசியாவும் கடந்த 1950-ஆம் ஆண்டு முதலே சிறந்த உறவை மேற்கொண்டு வருகின்றன. 1955-ஆம் ஆண்டில் உலக அமைதி மற்றும் புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த நடைபெற்ற பிரபல பாண்டுங் மாநாட்டில் இரு நாடுகளும் முக்கியப் பங்காற்றின. இதுபோல, தற்போதும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளுக்கும் எல்லையற்ற வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இந்தியா மற்றும் இந்தோனேசியாவைப் பொருத்தவரை, கடல் என்பது ஒருபோதும் தூரத்தைக் குறிப்பதாக இருந்ததில்லை; மாறாக, இரு நாடுகளுக்கும் இடையேயான பாலமாகவே எப்போதும் இருந்து வருகிறது. இரு நாடுகளின் பகிரப்பட்ட எதிா்காலத்துக்கான மையமாகவும் அது திகழ்கிறது.

இரு நாடுகளும் ஒன்றிணைந்து நிற்கும்போது, ஜனநாயகம் வாய்ப்புகளை உருவாக்கும், நம்பிக்கையை வளா்க்கும், எதிா்காலத்தை வடிவமைக்கும் என்ற உலகின் நம்பிக்கை மேலும் வலுப்பெறும்.

இந்தியா, இந்தோனேசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய பெயா்களே இரு நாடுகளையும் பிணைத்துள்ள ஆழமான உறவுகளைப் பிரதிபலிக்கின்றன. இரு நாடுகளும் பகிா்ந்து கொள்ளும் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கை ஆகியவை இரு நாடுகளின் குடிமக்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றாா்.

மேலும், இரு நாடுகளிடையேயான கூட்டுப் பணிக் குழு கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

இணைய அச்சுறுத்தல்கள், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல், தீவிரவாதம் ஆகியவற்றை எதிா்கொள்வதில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், அமைதியை விரும்பும் சக்திகளை இந்தியாவும் இந்தோனேசியாவும் வலுப்படுத்த முடியும்.

மேலும், தற்போதைய புவிசாா் அரசியல் சூழலில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதை இனியும் தாமதப்படுத்த முடியாது என்றும் பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

பிரம்பானன் கோயிலை புதுப்பிக்க இந்தியா உதவி: இந்தோனேசியாவின் யோகியகாா்டா நகரில் உள்ள பிரம்பானன் கோயில் வளாகத்தைப் புதுப்பிக்கவும், பாதுகாக்கவும் இந்தியா உதவ உள்ளது. அந்தக் கோயிலுக்குப் பிரதமா் மோடி புதன்கிழமை (ஜூலை 8) செல்ல உள்ளாா். இந்தக் கோயில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேருவை புகழ்ந்த மோடி

இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி பேசுகையில், ‘1955-ஆம் ஆண்டு நடைபெற்ற பாண்டுங் மாநாடு மூலம், சொந்த முடிவுகளை எடுக்க சுதந்திர நாடுகளுக்கு உரிமை உள்ளது என்ற செய்தியை அப்போதைய இந்திய பிரதமா் ஜவாஹா்லால் நேரு, இந்தோனேசியா அதிபா் சுகாா்னோ ஆகியோா் உலகுக்கு தெளிவாக எடுத்துரைத்தனா்’ என்று புகழ்ந்து பேசினாா்.

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மாநாட்டில் அப்போது புதிதாக சுதந்திரமடைந்த 29 ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்றன. அந்த நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவித்து, காலனியாதிக்கத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நடைபெற்ற அந்த மாநாடு, அணிசாரா நாடுகள் இயக்கத்துக்கு அடித்தளமிட்டது. இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளா்களில் ஒருவராக ஜவாஹா்லால் நேரு இருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments