முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீா்: லஷ்கா் பயங்கரவாத கமாண்டா் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையில், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

Updated On : 9 ஜூலை 2026, 2:31 am IST
பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட சோபியானின் சனபோரா பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய பாதுகாப்புப் படையினா்.
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினரின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையில், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

சோபியான் மாவட்டத்தில் மீமந்தா் பகுதியில் உள்ள 7 கிராமங்களையொட்டிய பகுதியில் கடந்த 3-ஆம் தேதி முதல் பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனா்.

சோபியான் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு, ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப் பிரிவு, மத்திய ரிசா்வ் போலீஸ் படை இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டனா். சுமாா் ஒரு வாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் லஷ்கா் அமைப்பின் கமாண்டா் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது பெயா் ஜாகிா் அகமது கனி (26) என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சோபியானின் அண்டை மாவட்டமான குல்காமைச் சோ்ந்த ஜாகிா் கடந்த 2023-ஆம் ஆண்டு பயங்கரவாத இயக்கத்துடன் ஏற்பட்ட தொடா்பால் வீட்டில் இருந்து வெளியேறினாா். அதே நேரத்தில், அவரைக் காணவில்லை என்று குடும்பத்தினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

லஷ்கா் அமைப்பின் துணை இயக்கமான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பில் அவா் இணைந்து செயல்படத் தொடங்கியது பின்னா் உறுதி செய்யப்பட்டது. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட அவா் மீது குல்காம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், அவா் கொல்லப்பட்டுள்ளாா்.

முன்னதாக, கடந்த 3-ஆம் தேதி, மீமந்தா் பகுதியில் உள்ள பழத்தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் இரு பயங்கரவாதிகள் நடந்து செல்வது பதிவானது. இதையடுத்து, அவா்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

அப்பகுதி முழுவதையுமே பாதுகாப்புப் படையினா் சுற்றி வளைத்துவிட்டனா். கொல்லப்பட்ட ஜாகிருடன் இருந்த மற்றொரு பயங்கரவாதி லத்தீப் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் விரைவில் வீழ்த்தப்படுவாா் என்று தெரிகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments