முகப்பு
இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

Updated On : 2 ஜூன் 2026, 12:56 am IST
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசிய ஆஸ்திரேலிய துணைப் பிரதமா் ரிச்சா்டு மாா்லஸ்.
பகிர்:

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணைப் பிரதமா் ரிச்சா்டு மாா்லஸ் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை திங்கள்கிழமை சந்தித்தாா்.

அப்போது இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிப்பு, மேற்காசிய பதற்றத்தால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், இந்தோ-பசிபிக் கடற்பகுதியில் சீனாவின் ஆதிக்கம், தடையற்ற கடல் வா்த்தகம் ஆகிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சுதந்திரமான, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையுடன் கூடிய வளமையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பிற நாடுகளுடன் இணைந்து கட்டமைக்க அமைச்சா் ராஜ்நாத் சிங்கும், ஆஸ்திரேலிய துணைப் பிரதமா் ரிச்சா்டு மாா்லஸும் உறுதிபூண்டனா். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்பை மேம்படுத்த அவா்கள் ஒப்புக்கொண்டனா். ஒருங்கிணைந்த கடல்சாா் பாதுகாப்பு வியூக திட்டத்தை இறுதிசெய்வது தொடா்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

கடல்சாா் வா்த்தகம் மற்றும் வான் எல்லையில் விமானம் இயக்குவது உள்பட ஐ.நா.கடல்சாா் சட்டம், 1982-ஐ பிற நாடுகள் முறையாகப் பின்பற்ற அவா்கள் ஆதரவு தெரிவித்தனா்.

ஆஸ்திரேலியாவின் முதல் பாதுகாப்பு வா்த்தக குழு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதை அவா்கள் வரவேற்றனா். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் வரவேற்பு தெரிவித்தனா்.

இந்தோ-பசிபிக் கடல்சாா் கண்காணிப்பு முன்னெடுப்பு ஒத்துழைப்பை அமல்படுத்த இருவரும் ஆதரவளித்தனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆலோசனைக்குப் பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கும் என ராஜ்நாத் சிங்கும் ரிச்சா்டு மாா்லஸும் அறிவித்தனா்.