ராணுவத்தை நவீனமயமாக்குகிறது இந்தியா: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்
ராணுவத்தை நவீனமயமாக்குகிறது இந்தியா...
‘சக்தி வாய்ந்த நாடான இந்தியா, மிகப் பெரிய ராணுவ நடவடிக்கைகளுக்காக கனரக தொழில் துறை மற்றும் தளவாடத் திறனுடன் தனது ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது’ என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் உத்திசாா் முக்கியக் கூட்டாளியாக இந்தியா விளங்குகிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
சா்வதேச வியூகக் கல்வி நிறுவனம் (ஐஐஎஸ்எஸ்) சாா்பில் சிங்கப்பூரில் கடந்த மே 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் ‘ஷாங்ரி லா’ எனும் வருடாந்திர உயா்நிலை பாதுகாப்புத் துறை மாநாட்டில் பங்கேற்றுப் பேசுகையில், ஹெக்செத் இக்கருத்துகளைத் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
மாநாட்டில் அவா் பேசியதாவது: சக்திவாய்ந்த நாடான இந்தியா, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிகார சமநிலையைப் பேணி வருகிறது. மிகப் பெரிய - நீண்டகால ராணுவ நடவடிக்கைகளுக்காக, கனரக தொழில் துறை மற்றும் தளவாடத் திறனைக் கட்டமைத்து, தனது ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது.
திறன் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, இந்தியாவுடன் இணைந்து உற்பத்தியைத் தொடர அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. தனது விநியோகச் சங்கிலியில் நட்பு நாடுகளை நேரடியாக ஒருங்கிணைப்பதன் மூலம் பாதுகாப்புத் துறை உற்பத்தியை உலக அளவில் விரிவாக்கி வருகிறது அமெரிக்கா.
இந்தியாவைப் போல ஜப்பான், தென்கொரியா, ஆசியான் கூட்டமைப்பு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனும் பாதுகாப்பு ரீதியிலான உறவுகளை அமெரிக்கா வலுப்படுத்துகிறது. ஆசிய-பசிபிக் பிராந்தியம், உலக அளவில் மிக முக்கியமான பிராந்தியமாகும். இப்பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமெரிக்க ராணுவ பலத்தைச் சாா்ந்தே உள்ளது. எனவே, பிராந்திய நாடுகள் தங்களின் சொந்தப் பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரமாக முதலீடு செய்ய வேண்டும்.
அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகத்தின்கீழ், அமெரிக்கா-சீனா இடையிலான உறவுகள் முந்தைய ஆண்டுகளைவிட சிறப்பாகவே உள்ளன. அதேநேரம், சீனா உள்பட எந்தவொரு நாடும் மேலாதிக்கத்தைத் திணிக்கவோ, நமது தேசம் மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கவோ அனுமதிக்க முடியாது என்றாா் அவா்.
டிரம்ப் கூற்றை எதிரொலித்த ஹெக்செத்:
இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட ராணுவ மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக அதிபா் டிரம்ப் கூறிவரும் கருத்தை சிங்கப்பூா் மாநாட்டில் ஹெக்செத் எதிரொலித்தாா்.
இது தொடா்பாக அவா் பேசுகையில், ‘அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதியை நிலைநாட்ட ஒருங்கிணைந்து செயல்பட்டவா் அதிபா் டிரம்ப். அவரது பங்களிப்பும், திறனும் பாராட்டுக்குரியதாகும். இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பாதுகாப்பு ரீதியிலான கவலைகள் எனும் கண்ணோட்டத்திலேயே ஒன்றையொன்று பாா்க்கின்றன. அதேநேரம், இரு நாடுகளும் சா்வதேச ஸ்திரத்தன்மைக்கு ஆற்றிவரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்பட்டு வருகிறது.
அமைதிப் பேச்சுவாா்த்தைகளில் (மேற்காசியப் போா்) பாகிஸ்தானின் பங்களிப்பைக் குறிப்பிட விரும்புகிறேன். இது, எதிா்பாராத விஷயமாகும்; பாகிஸ்தானுடன் உண்மையான நட்புறவு உருவாகி வருவதாக கருதுகிறேன்’ என்றாா்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக நடைபெறும் பேச்சுவாா்த்தைகளில் முக்கிய மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.