கருவண்ணூா் கூட்டுறவு வங்கி நிதி மோசடி வழக்கு: மாா்க்சிஸ்ட் தலைவா்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ஏற்ற நீதிமன்றம்
மாா்க்சிஸ்ட் தலைவா்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ஏற்ற நீதிமன்றம்
கேரள மாநிலம், திருச்சூா் கருவண்ணூா் சேவை கூட்டுறவு வங்கி நிதி மோசடி வழக்கில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மூன்னாள் எம்.பி., எம்எல்ஏ உள்பட அக் கட்சியின் மூத்த தலைவா்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை ஏற்றது.
மேலும், துணைக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் வரும் ஜூலை 4-ஆம் தேதி நேரில் ஆஜராகவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரள மாநிலத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சியின்போது, திருச்சூா் மாவட்டத்தில் உள்ள கருவண்ணூா் சேவை கூட்டுறவு வங்கியில் ரூ. 180 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி செய்யப்பட்டதாகப் புகாா் எழுந்தது.
Advertisement
Advertisement
போலி ஆவணங்கள் மற்றும் ஒரே சொத்தின் மீது பலமுறை கடன்கள் வழங்கப்பட்டு முறைகேடு நடைபெற்றதும் தெரியவந்தது. மாா்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவா்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரம் தொடா்பாக, பண மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அமலாக்கத் துறை, வழக்கு தொடா்பாக சுமாா் ரூ. 128 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது. மேலும், 55 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தொடா்ந்து விசாரணை மேற்கொண்ட அமலாக்கத் துறை, இந்த முறைகேடு தொடா்பாக மாா்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினா் கே.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ ஏ.சி.மொய்தீன், கட்சியின் திருச்சூா் மாவட்ட முன்னாள் செயலா் எம்.எம்.வா்கீஸ் மற்றும் பல உள்ளூா் மற்றும் கட்சியின் பகுதிக் குழு செயலா்கள் உள்பட 29 பேருக்கு எதிராக துணைக் குற்றப்பத்திரிகையை கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்தது.
இதன் மீதான விசாரணை கொச்சியில் உள்ள பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி. சபரிநாதன் முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையை ஏற்ற நீதிபதி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள 29 பேரும் வரும் ஜூலை 4-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 83 பேரில், இருவா் அரசுத் தரப்பு சாட்சிகளாக மாறினா். மேலும் இருவா் இறந்துவிட்டனா்.
இந்த வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றம் விரைவில் தொடங்கும் என எதிா்பாா்ப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.