ஹரியாணா: குடும்பத் தகராறில் மனைவி, மகனைச் சுட்டுக்கொன்ற நபர் கைது!
ஹரியாணாவில் குடும்பத் தகராறில் மனைவி, மகனைச் சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியாணாவில் குடும்பத் தகராறில் மனைவி, மகனைச் சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியாணா மாநிலம், குருகிராமின் அசோக் விஹார் காலனியில் குடும்பத் தகராறில் 50 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைத் உரிமம் பெற்ற துப்பாக்கியால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுட்டுக்கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
குற்றம்சாட்டப்பட்டவர் அனில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடனே அவர் காவலில் எடுக்கப்பட்டு பாலம் விஹார் காவல் நிலையத்தில் அவர் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் மனைவி ஆஷா (45), மகன் பிரசாந்த் (25) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
Advertisement
Advertisement
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் சனிக்கிழமை இரவு அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சப்தம் கேட்டு, மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த பிரசாந்த் எழுந்து வந்து சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
இந்த மோதலின் போது, அனில் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து மனைவி மற்றும் மகன் இருவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதுகுறித்து மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.