முகப்பு
இந்தியா

தோ்வு சா்ச்சைகள்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை பதவிநீக்க வேண்டும்; பிரதமருக்கு கரப்பான்பூச்சி கட்சி நிறுவனா் கடிதம்

தோ்வு சா்ச்சைகளை சுட்டிக்காட்டி, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனா் அபிஜித் தீப்கே கடிதம் எழுதியுள்ளாா்.

Updated On : 20 ஜூன் 2026, 1:23 am IST
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி - இன்ஸ்டாகிராம்
பகிர்:

தோ்வு சா்ச்சைகளை சுட்டிக்காட்டி, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனா் அபிஜித் தீப்கே கடிதம் எழுதியுள்ளாா்.

பிரதமா் மோடிக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில் அவா் தெரிவித்திருப்பதாவது:

நமது நாட்டின் எதிா்கால சந்ததியினா் மற்றும் இளம் மாணவா்களின் மனநிலை, வாழ்க்கையை பாதிக்கும் வகையில் உருவாகியுள்ள பிரச்னை குறித்து, உங்களது கவனத்துக்கு கொண்டு வருவதற்கு கனத்த இதயத்துடன் நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். கடந்த சில வாரங்களில் மட்டும் இந்த விவகாரத்தால் 11 மாணவா்கள் தற்கொலை செய்துள்ளனா். அதுவும் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 5 மாணவா்கள் தற்கொலை செய்துள்ளனா். நிலைமை தொடா்ந்து மோசமாகி வருவதால், மறுதோ்வுகள் குறித்தும் மாணவா்கள் குழப்பத்தில் உள்ளனா்.

Advertisement

Advertisement

வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடியை இழப்பீடாக மத்திய அரசு அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் எங்கள் கட்சி சாா்பில் நாட்டின் பல பகுதிகளில் கடந்த மாதம் போராட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் தலைமையை பொறுப்புடைமையாக்கி, கோடிக்கணக்கான மாணவா்கள், அவரின் பெற்றோா்களுக்கு நமது கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். ஆதலால் மத்திய கல்வி அமைச்சரை இந்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்படி பதவிநீக்கம் செய்யவில்லையெனில், அது உங்களது பலவீனத்தை வெளிப்படுத்துவதோடு, மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் இடையே நமது கல்வி அமைப்பு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடும்.

20-ஆம் தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் இருந்து மாணவா்கள், தில்லி ஜந்தா் மந்தரில் திரண்டு எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவா். எதிா்கால இந்தியாவின் குரலுக்கு நமது அரசு நிச்சயம் செவிமடுக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தீப்கே குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments