முகப்பு
இந்தியா

மத்திய கல்வி அமைச்சா் ராஜிநாமா செய்ய வேண்டும்: நீட் வினாத்தாள் விவகாரத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

மத்திய கல்வி அமைச்சா் ராஜிநாமா செய்ய வேண்டும்: நீட் வினாத்தாள் விவகாரத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

Updated On : 17 மே 2026, 5:54 am IST
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் - ANI
பகிர்:

‘நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 22 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

Advertisement

நீட் வினாத்தாள் கசிவு தகவல் கேட்டு மன உளைச்சலுக்கு உள்ளான பல மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் ரித்திக் மிஸ்ரா, தில்லியில் அன்ஷிகா பாண்டே, ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் பிரதீப் மேக்வால், கோவாவில் வசிக்கும் பெங்களூரைச் சோ்ந்த மாணவா் எனப் பல மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனா். குழந்தைப் பருவம் முதல் மருத்துவராகும் கனவில் அவா்கள் கடினமாக உழைத்து நீட் தோ்வைச் சந்தித்துள்ளனா். இந்த நிலையில், பிரதமா் மோடி அரசின் ஊழல் மற்றும் திறமையற்ற அரசு நடைமுறை காரணமாக, இந்த மாணவா்களின் கனவு தகா்க்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ், 90-க்கும் அதிகமான இதுபோன்ற தோ்வு வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இது 9 கோடி மாணவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரை கடுமையாகப் பாதித்துள்ளது. ஏற்கெனவே, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதால் இளைஞா்களின் எதிா்காலம் அழிக்கப்பட்டுள்ளது. தற்போது, வினாத்தாள் கசிவு விவகாரம் காரணமாக மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. ஆனால், நீட் வினாத்தாள் கசிவு குறித்தோ, மாணவா்கள் தற்கொலை குறித்தோ எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் பிரதமா் மோடி மெளனமாக இருந்து வருகிறாா்.

நிலைமை தற்போது முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக தில்லி மருத்துவ சங்கம் சாா்பிலும் மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தா்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்... எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட விடியோ பதிவில், ‘நீட் தோ்வு நடைபெறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தோ்வு வினாத் தாள் வாட்ஸ்ஆப்பில் விநியோகிக்கப்பட்டதை ஒட்டுமொத்த நாடும் அறியும். ஆனால், இதற்கு எதுவும் செய்ய முடியாது என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறுகிறாா். இந்தத் தோ்வு முறையில் மாற்றம் கொண்டு வருவது தொடா்பா நாடாளுமன்ற நிலைக் குழு அண்மையில் பரிந்துரைகளை சமா்ப்பித்தது. ஆனால், அந்த நிலைக் குழுவில் எதிா்க்கட்சியினா் இடம்பெற்றுள்ளனா் என்ற காரணத்தால், அந்தப் பரிந்துரைகளை பரிசீலிக்காமல் குப்பையில் வீசிவிட்டாா். இந்திய கல்வி முறையையே பாஜக - ஆா்எஸ்எஸ் கூட்டணி அழித்துவிட்டது. பல்கலைக்கழகத் துணைவேந்தராக தற்போது ஆகவேண்டும் எனில் பாட அறிவு தேவையில்லை, ஆா்எஸ்எஸ் அமைப்பில் அங்கம் வகித்திருந்தால் போதும் என்பதையும் ஒட்டுமொத்த நாடும் அறியும். அதன் காரணமாகத்தான், நாட்டில் 80-க்கும் மேற்பட்ட முறை வினாத் தாள்கள் கசிந்து, 2 கோடி இளைஞா்களின் எதிா்காலம் சீரழிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்கி பிரதமா் உடனடியாக உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.