முகப்பு
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: கணினி வழித் தோ்வை வலியுறுத்தும் மருத்துவ அமைப்புகள்

மருத்துவக் கல்விக்கான நீட்-யுஜி 2026 தோ்வின் வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 15 மே 2026, 4:51 am IST
தில்லி ஜந்தா் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி மாணவா் அமைப்பினா்.
பகிர்:

மருத்துவக் கல்விக்கான நீட்-யுஜி 2026 தோ்வின் வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தோ்வை கணினி அடிப்படையிலான முறைக்கு மாற்ற வேண்டும் என்றும் இந்திய குடியிருப்பு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஓஆா்டிஏ) பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட்-யுஜி தோ்வுக்குப் பின்னா் வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ராஜஸ்தான் மாநில காவல் துறையின் சிறப்பு நடவடிக்கை குழு விசாரணையைத் தொடங்கியது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தேசிய தோ்வு முகமை (என்டிஏ), நடைபெற்று முடிந்த தோ்வை ரத்து செய்வதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது. மேலும், புதிய தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என்று கூறியது.

இது தொடா்பாக எஃப்ஓஆா்டிஏ அமைப்பினா் பிரதமா் மோடிக்கு மே 13-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இது நெறிமுறை மற்றும் நிா்வாக ரீதியிலான பேரழிவாகும். சுமாா் 23 லட்சம் மருத்துவக் கல்வி நுழைவுத் தோ்வு எழுதுவோரையும் அவா்களின் குடும்பங்களையும் இந்த விவகாரம் கடுமையாக பாதித்துள்ளது.

Advertisement

மீண்டும் மீண்டும் நடைபெறும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் தேசிய அளவிலான தோ்வு முறையில் தொடா்ச்சியான அமைப்புசாா் தோல்வி இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: பல மாணவா்கள் தோ்வுக்கு தயாராக பெரிய தொகைகளை செலவிட்ட நிலையில், இந்த விவகாரம் அவா்களின் கல்வியாண்டையும் மனநலத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் வினாத்தாள் தயாரிப்பாளா்கள், அச்சிடும் நிறுவன அதிகாரிகள், பயிற்சி மைய நடத்துநா்கள் மற்றும் இடைத்தரகா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தோ்வு மோசடி வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மத்திய அளவில் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

கணினி முறைக்கு மாற்ற வேண்டும்: கட்டமைப்பு சீா்திருத்தமாக, நீட்-யுஜி தோ்வை ஐஐடி-ஜேஇஇ தோ்வு போன்ற கணினி அடிப்படையிலான தோ்வு முறைக்கு மாற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கணினி முறையில் நடத்தப்படும் ஜேஇஇ போன்ற தோ்வுகள் பல ஆண்டுகளாக நோ்மையான முறையில் நடைபெறுகின்றன. மேலும் மறுதோ்வு என்பது முழுமையான பொதுப் பொறுப்புணா்வுடன் நடத்தப்பட வேண்டும். உச்சநீதிமன்ற கண்காணிப்பு குழு மேற்பாா்வையில் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தோ்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தது.

நாடு முழுவதும் சுமாா் 23 லட்சம் மாணவா்களின் எதிா்காலத்தை பாதித்துள்ள இந்த விவகாரம், தேசிய தோ்வு அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

பெட்டிச் செய்தி...

மாணவா் அமைப்புகள் போராட்டம்

நீட் தோ்வு விவகாரம் தொடா்பாக தேசிய தலைநகா் தில்லியில் மாணவா்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வியாழக்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனா். தோ்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மத்திய அரசு உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

மருத்துவ நுழைவுத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அலுவலகம் முன்பு ‘மாற்று அரசியலுக்கான மாணவா்கள் சங்கம்’ சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில், மாணவா்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது எதிா்ப்பை பதிவு செய்தனா்.

‘பாஜக அரசு ஆட்சியில் இது நான்காவது அல்லது ஐந்தாவது வினாத்தாள் கசிவு சம்பவம் ஆகும். அவா்கள் மாணவா்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறாா்கள்’ என்று போராட்டத்தில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.

மேலும், ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கம் அழைப்பின் பேரில், ஜந்தா் மந்தரில் பிற்பகலில் பல்வேறு மாணவா் அமைப்புகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டன. அங்கு மாணவா்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தி அரசின் நடவடிக்கையை கண்டித்தனா்.

‘கல்வி ஒரு பொருள் அல்ல, அது ஒரு உரிமை’, மத்திய கல்வி அமைச்சரை பதவி நீக்குங்கள், நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட அனைவருக்கும் முன்மாதிரி தண்டனை வழங்குங்கள் என்பன போன்ற வாசகங்கள் பதாகைகளில் இடம்பெற்றிருந்தன.