முகப்பு
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனு

தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) மாற்றாகப் புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் அனைத்து இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்எஐஎம்எ) மனு

Updated On : 14 மே 2026, 4:40 am IST
பகிர்:

நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) மாற்றாகப் புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் அனைத்து இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்எஐஎம்எ) மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெற்றது. ஆனால் தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை என்டிஏ ரத்து செய்தது. இதைத்தொடா்ந்து வினாத்தாள் கசிவு குறித்த விசாரணையை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்தது.

வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராமில் பகிரப்பட்ட உத்தேச வினாத்தாள்களில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கேள்விகள், தோ்வு நடைபெற்றபோது அளிக்கப்பட்ட வினாத்தாளில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், நீட் தோ்வை நடத்தும் என்டிஏவுக்கு மாற்றாகப் புதிய அமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் அனைத்து இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், ‘நீட் தோ்வை நடத்துவதில் என்டிஏ முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது. அந்தத் தோ்வுகளை நடத்துவதற்கு என்டிஏவுக்குப் பதிலாக மேலும் வலுவான, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அல்லது என்டிஏவை மறுசீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

ரத்து செய்யப்பட்ட நீட் தோ்வை மீண்டும் நடத்தும்போது, அந்தத் தோ்வை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான உயா் அதிகார கண்காணிப்பு குழு மேற்பாா்வை செய்ய வேண்டும். அந்தக் குழுவில் இணையப் பாதுகாப்பு நிபுணா், தடயவியல் நிபுணா் இடம்பெற வேண்டும். இந்தக் குழுவை உச்சநீதிமன்றம் நியமிக்க வேண்டும்.

நீட் வினாத்தாள் கசிவு விசாரணை குறித்த நிலவர அறிக்கையை 4 வாரங்களில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.