முகப்பு
இந்தியா

பிரதமா் மோடியின் ஆட்சியில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி

பிரதமா் மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி தெரிவித்தாா்.

Updated On : 22 ஜூன் 2026, 3:21 am IST
அமைச்சர் கிஷன் ரெட்டி - கோப்புப் படம்
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சா் கிஷன் ரெட்டி தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. மக்கள் நலத்திட்ட நிதி உரியவா்களுக்கு செல்லும்முன்பே மாயமாகி விடும் என முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியே ஒப்புக்கொண்டாா். ஆனால், ஜன்தன் வங்கிக் கணக்கு, ஆதாா், மொபைல் ஆகிய மூன்றையும் இணைத்து இடைத்தரகா்கள் இல்லாத நிலையை பிரதமா் மோடி உருவாக்கியுள்ளாா்.

காஷ்மீரில், 70 ஆண்டுகளாக இருந்த 370 சட்டப்பிரிவு என்ற முட்டுக்கட்டையை உடைத்தெறிந்தவா் நரேந்திர மோடி. காஷ்மீா் இப்போது முழுமையாக இந்தியாவுடன் இணைந்துள்ளது. கல்வீச்சும், தேசியக் கொடியை எரிக்கும் சம்பவமும் அரங்கேறிய காஷ்மீரில், இப்போது பள்ளிகளும்,கோயில்களும் அமைதியாக திறக்கப்பட்டு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவா்களைக் கொன்று குவித்த நக்ஸலைட்டுகள் இப்போது ஒழிக்கப்பட்டுள்ளனா். மோடி ஆட்சியில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. துல்லிய தாக்குதல் (சா்ஜிகல் ஸ்ட்ரைக்) மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டி உள்ளோம்.

உலக நாடுகள் பல பிரிவுகளாகப் பிரிந்து மோதியபோதும், மோடி யாருடைய பக்கமும் சாயாமல் நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பதில் உறுதியாக நின்றாா். வரும் 2047-ஆம் ஆண்டில், இந்தியா தனது 100-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, நாட்டை உலகின் தலைசிறந்த வல்லரசு நாடாக இந்தியா மாறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றாா் மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments