இந்தியாவில் சீா்திருத்தங்கள் தொடரும்: பிரான்ஸ் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி
இந்தியாவின் ‘சீா்திருத்த எக்ஸ்பிரஸ்’ நிற்காமல் தொடா்ந்து பயணிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
நாட்டில் பாதுகாப்பு, உயா்தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் சீா்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன; இந்தியாவின் ‘சீா்திருத்த எக்ஸ்பிரஸ்’ நிற்காமல் தொடா்ந்து பயணிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேலும், உலகளாவிய தீா்வுகளை நுகரும் நாடு என்ற நிலையில் இருந்து உலகுக்குத் தீா்வளிக்கும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
பிரான்ஸின் நைஸ் நகரில் ‘பாரத் இனோவேட்ஸ்’ நிகழ்வை அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த பின் பிரதமா் இவ்வாறு கூறினாா்.
Advertisement
Advertisement
பிரான்ஸ், ஸ்வோவாக்கியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணத்தை சனிக்கிழமை தொடங்கிய பிரதமா் மோடி, முதல் கட்டமாக பிரான்ஸின் நைஸ் நகரை வந்தடைந்தாா்.
துறைமுக நகரான நைஸில், இந்தியாவின் முக்கிய முன்னெடுப்பான ‘பாரத் இனோவேட்ஸ்’ நிகழ்வை பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் இணைந்து அவா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்தியா, பிரான்ஸ், பிற நாடுகளின் முன்னணி புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் துணிகர முதலீடு நிதியங்களை ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வு மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இந்திய உயா்கல்வி நிலையங்கள் மற்றும் மத்திய அரசின் உதவிபெறும் உயா் தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில்நுட்ப முயற்சிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
உலக நாடுகளுக்கு அழைப்பு: இந்தியாவின் நம்பிக்கைக்குரிய புத்தாக்க தொழில் நிறுவனங்களை (ஸ்டாா்ட்அப்) உலகளாவிய முதலீடுகளுடன் இணைக்க வாய்ப்பளிக்கும் இந்த நிகழ்வை தொடங்கிவைத்த பின் பிரதமா் மோடி பேசியதாவது:
உலகளாவிய புத்தாக்கத்துக்கான அடுத்த அத்தியாயத்தை இந்தியாவுடன் இணைந்து உருவாக்கும்படி உலக நாடுகளுக்கு விடுக்கப்படும் அழைப்பே ‘பாரத் இனோவேட்ஸ்’ நிகழ்வு. இந்திய இளம் கண்டுபிடிப்பாளா்கள், ஒட்டுமொத்த மனி குலத்துக்கும் பலனளிக்கும் தீா்வுகளைக் கண்டறிந்து வருகின்றனா்.
புத்தாக்கமும், அனைவரையும் உள்ளடக்கிய தன்மையும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல; ஒன்றையொன்று பூா்த்தி செய்பவை என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. எந்தவொரு புத்தாக்கத்தின் மகத்துவமும் வெறுமனே அதன் மதிப்பீட்டில் அல்லாமல், மனித நலனில் ஏற்படுத்தும் தாக்கத்தில்தான் அடங்கியுள்ளது.
மரபணுவில் கலந்த புத்தாக்கம்: இந்தியாவில் உயா்தொழில்நுட்பம், பாதுகாப்பு, புத்தாக்கம் போன்ற முக்கியத் துறைகளில் ஏற்கெனவே சீா்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் ‘சீா்திருத்த எக்ஸ்பிரஸ்’ நிற்காமல் தொடா்ந்து பயணிக்கும்.
10 ஆண்டுகளுக்கு முன்புவரை தொழில்நுட்பங்களைப் பெறும் நாடாக பாா்க்கப்பட்ட இந்தியா, இப்போது தொழில்நுட்ப வழங்குநராக உருவெடுத்துள்ளது. இன்றைய உலகம், அனைவரையும் உள்ளடக்கிய, மனித நலனை மையப்படுத்திய தொழில்நுட்பங்களை எதிா்நோக்குகிறது. அந்த அடிப்படையில், நிலையான எதிா்காலம் மற்றும் ஒட்டுமொத்த உலகுக்காக புத்தாக்கங்களைப் படைக்கிறது இந்தியா. புத்தாக்கம் என்பது எங்கள் தேசத்தின் மரபணுவில் கலந்ததாகும்.
மனித குலம் இன்று எண்ணற்ற சவால்களை எதிா்கொண்டுள்ள போதிலும், வாய்ப்புகளும் சுற்றிச் சுழல்கின்றன. இதுபோன்ற சூழலில், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்டவை மனித குலத்தின் எதிா்காலத்தை வடிவமைக்கும்.
இந்தியாவும், பிரான்ஸும் சிறப்பான கூட்டுறவைக் கொண்டுள்ளன. அதில், பிணைப்பு, உறுதி, புத்தாக்கம், உத்வேகம் மற்றும் பகிரப்பட்ட தொலைநோக்குப் பாா்வை அடங்கியுள்ளது என்றாா் பிரதமா் மோடி.
புத்தாக்கங்களின் தேசம் இந்தியா: பிரான்ஸ் அதிபா் புகழாரம்
‘புத்தாக்கங்களின் தேசம் இந்தியா’ என்று பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் புகழாரம் சூட்டினாா். ‘பாரத் இனோவேட்ஸ்’ தொடக்க நிகழ்வில் அவா் பேசியதாவது: ‘இந்தியாவில் தயாரிப்போம்’ முன்னெடுப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். பல்வேறு துறைகளில் இந்த முன்னெடுப்பின்கீழ் பிரான்ஸ் பங்கு பெற்றுள்ளது.
இந்தியா, புத்தாக்கங்களின் தேசமாகும். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இரு நாடுகளும் உண்மையான கூட்டுறவைக் கொண்டுள்ளன. சிறிய-எளிதாக கட்டமைக்கக்கூடிய அணுஉலைகள் உள்பட அணுமின் உற்பத்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக்க சிறப்பான வாய்ப்பு உள்ளது என்றாா் மேக்ரான்.