இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை; அனைவருக்கும் ஏஐ! பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு
பிரான்ஸில் பாரத் இனோவேட்ஸ் எனும் 3 நாள் நிகழ்வைத் தொடக்கிவைத்து பிரதமர் மோடி பேசியது குறித்து...
இந்தியாவின் மரபணுவிலேயே (டிஎன்ஏ) புதுமைகள் பொதிந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 14) தெரிவித்தார்.
பிரான்ஸில் பாரத் இனோவேட்ஸ் எனும் 3 நாள் நிகழ்வை தொடக்கிவைத்துப் பேசும்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு ஒருவார கால அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 13) புறப்பட்டுச் சென்றுள்ளார். இப்பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள நைஸ் நகரைச் சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரானை இன்று (ஜூன் 14) சந்தித்துப் பேசினார்.
Advertisement
Advertisement
இந்தியா - பிரான்ஸ் புத்தாக்க ஆண்டின் ஒரு பகுதியாக இந்திய உயா்கல்வி நிலையங்கள் மற்றும் மத்திய அரசின் உதவிபெறும் உயா் தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில்நுட்ப முயற்சிகளைக் காட்சிப்படுத்தும் பாரத் இனோவேட்ஸ் எனும் 3 நாள் நிகழ்வை அதிபர் இமானுவேல் மேக்ரானும் பிரதமர் நரேந்திர மோடியும் இன்று தொடக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
’’இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை பொதிந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரந்த ஞானத்தின் மூலம் உலகிற்கு வழிகாட்டியுள்ளது. மருத்துவம் முதல் யோகா வரை மனித குலத்துக்கான பங்களிப்பில் நாட்டிற்கு முக்கியப் பங்கு உண்டு. இத்தகைய நாம் வளமான பாரம்பரியத்தின் மீது நாம் தொழில்நுட்பத்தை கட்டியெழுப்பி புதிய திசையையும் உத்வேகத்தையும் வழங்குகிறோம்.
மனித குலத்துக்கு சேவையாற்றும் தொழில்நுட்பத்திற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த கொள்கையே டிஜிட்டல் புரட்சியை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அடிப்படையாகவும் இது அமைந்துள்ளது. செய்யறிவு அனைவருக்குமானது என்ற நோக்கத்தை இது உருவாக்குகிறது. அனைவரின் மகிழ்ச்சி மற்றும் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது’’ எனப் பிரதமர் மோடி பேசினார்.
இந்தியா - பிரான்ஸ் இடையிலான புத்தாக்க ஆண்டின் மைய நிகழ்ச்சியாக பாரத் இனோவேட்ஸ் நிகழ்ச்சி (ஜூன் 14 முதல் 16 ஆம் தேதி வரை) நடைபெறவுள்ளது. தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய 120 இந்தியர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் உலக சந்தைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உட்பட 15 உயர்கல்வி நிறுவனங்கள், துணிகர மூலதன நிறுவனங்கள் முதல் உலகளாவிய தொழில் துறைத் தலைவர்கள் வரை 500-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
Innovation is embedded in India's DNA PM Modi champions 'AI for All' at Bharat Innovates 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.