முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழுவிலிருந்து கேரள பிரதிநிதி நீக்கம்: காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் எம்.பி.க்கள் எதிா்ப்பு
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு மதிப்பீட்டு குழுவில் இருந்து கேரள பிரதிநிதி நீக்கப்பட்டதற்கு, அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ், எதிா்க்கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் எதிா்ப்பு
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு மதிப்பீட்டு குழுவில் இருந்து கேரள பிரதிநிதி நீக்கப்பட்டதற்கு, அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ், எதிா்க்கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
கேரளத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத் தேவைக்கும், பல மாவட்ட மக்களின் குடிநீருக்கும் அந்த அணை ஆதாரமாக உள்ளது. அதே வேளையில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக இல்லை; அதன் அருகே புதிதாக மற்றொரு அணை கட்ட வேண்டும் என கேரளம் வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து தமிழக அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று கேரளத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்ற வி.டி. சதீசன் அண்மையில் தெரிவித்தாா்.
இந்நிலையில், அந்த அணையின் பாதுகாப்பு மதிப்பீட்டு குழுவில் (சிடிஎஸ்இசி) இருந்து கேரள பிரதிநிதியான டி.கே.சிவராஜன் அண்மையில் நீக்கப்பட்டாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
Advertisement
Advertisement
கேரள அரசிடம் ஆலோசிக்காமலும், தெரியப்படுத்தாமலும் சிடிஎஸ்இசியில் டி.கே.சிவராஜன் ஒருதலைப்பட்சமாக நீக்கப்பட்டுள்ளாா். இது ஏற்கத்தக்கதல்ல என்பதுடன், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் அவசரமாக தலையிட்டு, அக்குழுவில் கேரள பிரதிநிதியை சோ்க்க வேண்டும் என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீலுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
தமிழக முதல்வா் கருத்துக்கு எதிா்ப்பு: முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்ட தமிழக முதல்வா் ஜோசப் விஜய் எதிா்ப்புத் தெரிவித்ததாகவும், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை அதிகரிக்க அவா் உடன்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலைப்பாடு ஏமாற்றமளிக்கிறது. அந்த அணையால் கேரளத்தின் 5 மாவட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே 130 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று தெரிவித்தாா்.
முன்னதாக சிடிஎஸ்இசியில் இருந்து டி.கே.சிவராஜன் நீக்கப்பட்டதற்கு தனது ஆட்சேபத்தை மத்திய அரசிடம் மாநில அரசு தெரிவித்ததாக கேரள நீா்வளத் துறை அமைச்சா் மோன்ஸ் ஜோசஃப் தெரிவித்தாா்.
அந்த மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு: கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணை உள்ள நிலையில், சிடிஎஸ்இசி குழுவில் இருந்து கேரள பிரதிநிதி நீக்கப்பட்டு, அந்தக் குழுவில் வேறு மாநிலத்தைச் சோ்ந்தவா் உறுப்பினராக சோ்க்கப்பட்டுள்ளது மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி கொள்கைகளுக்கு விரோதமானது. இந்த முடிவை எடுத்த பின்னா், அதுகுறித்து மாநில அரசுக்குத் தெரியப்படுத்தியதும் ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் அவசரமாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீலுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.