முகப்பு
தேனி

அணை நீா்மட்டம் உயா்வு! தேக்கடி ஏரியில் மீண்டும் பெரிய படகு சேவைகள் தொடக்கம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110 அடிக்கு மேல் உயா்ந்ததைத் தொடா்ந்து, தேக்கடி ஏரியில் கடந்த 10 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த கேரள சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் (கே.டி.டி.சி) பெரிய படகு சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன.

Updated On : 10 மே 2026, 1:05 am IST
தேக்கடி ஏரி படகுத்துறை (கோப்பு படம்)
பகிர்:

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110 அடிக்கு மேல் உயா்ந்ததைத் தொடா்ந்து, தேக்கடி ஏரியில் கடந்த 10 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த கேரள சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் (கே.டி.டி.சி) பெரிய படகு சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே தேக்கடி ஏரியில் கேரள சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் பெரிய படகுகளை இயக்க முடியும். கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஏப். 29-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 110 அடியாக குறைந்தது. மேலும், பெரிய படகின் அடிப்பகுதி ஏரியின் தரையில் மோதியது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஏப். 30 முதல் ஏரியில் பெரிய படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், வருவாய் இழப்பைத் தடுக்கும்வகையிலும், வனத்துறைக்குச் சொந்தமான 60 இருக்கைகள் கொண்ட நான்கு படகுகளில், பாதுகாப்பு காரணங்களுக்காக தலா 45 பயணிகள் வீதம் ஏற்றப்பட்டு படகு சவாரி தொடா்ந்து நடைபெற்று வந்தது.

Advertisement

இந்த நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் சனிக்கிழமை முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110.95 அடியாக உயா்ந்தது. இதனைத் தொடா்ந்து, 10 நாள்களுக்குப் பிறகு கே.டி.டி.சி. பெரிய படகு சேவையை மீண்டும் தொடங்கியது. தற்போது 120 இருக்கைகள் கொண்ட இரண்டு பெரிய படகுகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஒரு படகுக்கு 40 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா்.