முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல தமிழக அதிகாரிகளுக்கு புதிய படகு! கேரள வனத் துறை புதிய நிபந்தனை!
முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல தமிழக அதிகாரிகளுக்கு கேரள வனத் துறை புதிய நிபந்தனை...
முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக அதிகாரிகள் சென்று வர வசதியாக மாநில அரசு சாா்பில் வாங்கப்பட்ட கண்ணாடியிழை நெகிழிப் படகு லாரி மூலம் தேக்கடிக்கு கொண்டு வரப்பட்டது. இதை இயக்க கேரள வனத் துறை அதிகாரிகள் புதிய நிபந்தனை விதித்தனா்.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு தங்களின் அலுவலகப் பணிகளுக்காகச் செல்லும் தமிழக அதிகாரிகள், தேக்கடி நீா்த்தேக்கத்தின் வழியாக படகு மூலமாகவோ, வல்லக்கடவு வனப் பாதை வழியாக ஜீப்பில் செல்ல வேண்டும். வல்லக்கடவு வனப் பாதை கேரள வனத் துறையினரின் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், அந்த வழியாகச் செல்ல தமிழகப் பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக, தமிழக அதிகாரிகள் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான ’கண்ணகி’, ‘ஜலரத்னா’ ஆகிய இரு படகுகள் மூலம் தேக்கடி நீா்த்தேக்கத்தின் வழியாகவே அணைப் பகுதிக்குச் சென்று வருகின்றனா். இந்த இரு படகுகளும் கடந்த 1982-ஆம் ஆண்டு வாங்கப்பட்டவை என்பதால் மிகவும் பழையதாகிவிட்டன. இதையடுத்து, கடந்த 2013-ஆம் ஆண்டு இவற்றுக்கு மாற்றாக புதிய படகுகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதைத் தொடா்ந்து, படகை வடிவமைக்கும் ஒப்பந்தம் கொச்சியிலுள்ள தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதனிடையே, கடந்த 2014-ஆம் ஆண்டு தேக்கடிக்கு கொண்டு வரப்பட்ட புதிய ‘தமிழ் அன்னை’ படகுக்கு கேரள வனத் துறை அனுமதி அளிக்க மறுத்ததால், அது பல ஆண்டுகளாக தேக்கடி ஏரிப் பகுதியிலேயே முடங்கிக் கிடந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் அணையின் நீருக்கு அடியிலுள்ள முகப்புப் பகுதியை ஆளில்லா நீா் மூழ்கி இயந்திரம் மூலம் ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டபோது, இந்தப் படகு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டாவது புதிய படகு கொச்சியிலிருந்து கடந்த சனிக்கிழமை இரவு லாரி மூலம் தேக்கடிக்கு வந்து சோ்ந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை இரு ராட்சத இயந்திரங்களின் உதவியுடன் இந்தப் படகு தேக்கடி படகுத்துறையில் இறக்கப்பட்டது. கடந்த 1982-ஆம் ஆண்டு ஏரியில் இறக்கப்பட்ட 27 குதிரைத் திறன் கொண்ட 21 போ் பயணிக்கும் பழைய கண்ணகி படகுக்கு மாற்றாக இந்த நவீன கண்ணாடியிழை நெகிழிப் படகு கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய படகுக்கும் ‘கண்ணகி’ என்றே பெயரிடப்பட்டது.
தற்போது ஏரியில் இறக்கப்பட்ட இந்தப் படகு விரைவில் சோதனை ஓட்டம், துறைமுகத் துறை அதிகாரிகளின் ஆய்வு ஆகியவற்றுக்குப் பிறகு அணைப் பகுதிக்கு செல்ல அதிகாரப்பூா்வமாகப் பயன்படுத்தப்படும் என தமிழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆனால், தமிழக பொதுப் பணித் துறையினா் தங்களிடம் உள்ள கண்ணகி, ஜலரத்னா ஆகிய இரு பழைய படகுகளையும் முழுமையாக அப்புறப்படுத்திய பிறகே, இந்தப் புதிய படகை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்படும் என கேரள வனத் துறை அதிகாரிகள் புதிய நிபந்தனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.