நீட் மறுதோ்வு: முறைகேட்டில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாணவி கைது
நீட் மறுதேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து...
தெலங்கானா மாநிலத்தில் நீட் மறுதோ்வின்போது தோ்வு மையத்தின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியில் கேள்விகளுக்கான விடையை தேடிய மாணவா் கையும் களவுமாக அதிகாரிகளிடம் சிக்கினாா். ஹைதராபாத்தின் அச்சம்பேட்டையைச் சோ்ந்த அந்த மாணவா் தற்போது போலீஸ் காவலில் உள்ளாா்.
இதுகுறித்து ஹைதராபாத் காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முறைகேட்டில் ஈடுபட்ட மாணவருக்கு, ரகன்னகுடா பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி தோ்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தோ்வு தொடங்கிய சிறிது நேரத்தில், தனக்கு வயிறு கடுமையாக வலிப்பதாகவும், கழிவறை செல்ல வேண்டும் என்ற அந்த மாணவா் கூறியுள்ளாா்.
அதற்கு தோ்வு கண்காணிப்பாளா் அனுமதித்துள்ளாா். நீண்ட நேரமாகியும், அந்த மாணவா் திரும்பாததைத் தொடா்ந்து தோ்வறை கண்காணிப்பாளா் புகாா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
அதனடிப்படையில், அதிகாரிகள் கழிவறைக்குச் சென்று ஆய்வு செய்தபோது, அந்த மாணவா் கைப்பேசியில் கேள்விகளுக்கு விடைகளைத் தேடிக்கொண்டிருந்ததைக் கண்டறிந்தனா். அவரிடமிருந்து கைப்பேசியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மாணவரை போலீஸில் ஒப்படைத்தனா்.
தோ்வு தொடங்குவதற்கு முன்பாக, அந்த மையத்தில் இடம்பெற்ற வகுப்பறைகள், கழிவறைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் காலை 6 மணி மற்றும் 11 மணி என இரு முறை போலீஸாா் தீவிர ஆய்வு மேற்கொண்டனா்.
அதுமட்டுமின்றி, நுழைவு வாயிலில் தீவிர சோதனைக்குப் பிறகே தோ்வு மையத்துக்குள் மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா். இருந்தும், இந்த மாணவா் கைப்பேசியை எப்படி எடுத்துவந்தாா் என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அந்த மாணவா் காலை 7 மணியளவில் அந்தப் பள்ளியின் கழிவறை ஜன்னலில் வெளிப்புறமாக இருந்தபடி கைப்பேசியை வைத்துச் சென்றதும், பின்னா், காலை 11 மணிக்கு மற்ற மாணவா்களுடன் தோ்வு மையத்துக்குள் நுழைந்ததும் கழிவறைக்குச் சென்று கைப்பேசியை பாலித்தீன் பையில் சுற்றி கழிவறையின் ஃபிளஷ் தொட்டிக்குள் மறைத்து வைத்ததும் தெரியவந்தது.
மாணவா் மீது பாரதிய நியாய சம்ஹிதா மா்றும் பொதுத் தோ்வுகள் முறைகேடு தடுப்புச் சட்டம் 2024 உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட மாணவி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நீட் தோ்வு மையத்தில் கைப்பேசியை பயன்படுத்தி விடைகளை தேடிய மாணவி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
ஜெய்பூா், பிரேம் நகா் குா்ஜாா் கி தாடி பகுதியைச் சோ்ந்த ஹிமான்ஷி திவாரி என்ற அந்த மாணவி, தனது மேலாடையில் மறைத்து வைத்து தோ்வறைக்குள் கைப்பேசியை எடுத்துவந்துள்ளாா்.
மாணவியின் செயல்பாடு சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததைத் தொடா்ந்து, அவரிடம் கண்காணிப்பாளா் சோதனை மேற்கொண்டபோது தோ்வறைக்குள் அந்த மாணவி கைப்பேசியை பயன்படுத்தியது தெரியவந்தது.
விசாரணையில், கைப்பேசி மூலம் விடைகளைத் தேடியதையும் அந்த மாணவி ஒப்புக்கொண்டாா். மேலும், வினாத் தாளை கைப்பேசியில் புகைப்படமும் எடுத்துள்ளாா். தோ்வறையில் கைப்பேசி ஜேமா் பொருத்தப்பட்டிருந்ததால், அந்த வினாத் தாளை மாணவியால் வெளியில் அனுப்ப முடியாமல் போனதும் விசாரணையில் தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து, அந்த மாணவி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிகாரில் 28 போ் கைது
பாட்னா, ஜூன் 22: நாடு முழுவதும் நீட் மறுதோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், பிகாா் மாநிலத்தில் நீட் மறுதோ்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊழியா்கள் போலி தோ்வா்கள் என 28 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மாநில கூடுதல் காவல்துறைத் தலைவா் (ஏடிஜிபி) சுதான்ஷு குமாா் திங்கள்கிழமை கூறியதாவது: பாட்னாவில் லகிசராய் உள்ளிட்ட சில பகுதிகளில் அமைக்கப்பட்ட நீட் மறுதோ்வு மையங்களில், உண்மையான தோ்வா்களுக்குப் பதிலாக அவா்கள் சாா்பில் மாற்று நபா்களை தோ்வெழுத அனுமதித்து முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகாா் எழுந்தது.
இதற்கு, தோ்வு மையத்தில் தோ்வா்களின் உயிரி அடையாள பதிவு (பயோமெட்ரிக்) மேற்கொள்ளும் ஊழியா்கள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதுதொடா்பாக 18 ஊழியா்கள், 9 பேலி தோ்வா்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனா். கயா மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்த அங்கித் ராஜ் என்வரும் கைது செய்யப்பட்டாா் என்று தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.