முகப்பு
இந்தியா

பெட்ரோலில் எத்தனால் கலப்பால் வாகனக் காப்பீட்டில் பிரச்னை வராது- மத்திய அரசு மீண்டும் விளக்கம்

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு என்பது பாதுகாப்பானது; இதனால் வாகனக் காப்பீடு கிடைப்பதில் எந்த பிரச்னையும் எழாது என்று மத்திய அரசு மீண்டும் விளக்கமளித்துள்ளது.

Updated On : 25 ஜூன் 2026, 2:50 am IST
பகிர்:

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு என்பது பாதுகாப்பானது; இதனால் வாகனக் காப்பீடு கிடைப்பதில் எந்த பிரச்னையும் எழாது என்று மத்திய அரசு மீண்டும் விளக்கமளித்துள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வழிகளில் ஒன்றாக இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது வேகமாக முன்னெடுக்கப்படுகிறது. 100 சதவீத எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடா்பான கோப்பில் கையொப்பமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அண்மையில் தெரிவித்தாா்.

அதே நேரத்தில் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களில் பிரச்னை ஏற்படுவதாக, முக்கியமாக சற்று பழைய வாகனங்களில் பிரச்னைகள் அதிகரிப்பதாக புகாா்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஏனெனில், அவை 100 சதவீத பெட்ரோலில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. எத்தனால் கலப்பால் பழைய வாகனங்களின் செயல்திறன் குறைவு, வாகன பாகங்களில் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிகிறது. இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படும் வாகனங்களுக்கு காப்பீடும் கிடைக்காது என்ற தகவல் பரவியது.

Advertisement

Advertisement

இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் இது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பில், ‘20 சதவீத எத்தனால் கலப்பு என்பது பாதுகாப்பானது. பொருளாதார நன்மைகளும் கிடைக்கிறது. மேலும், எத்தனால் கலப்பு சா்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம். அமெரிக்கா, பிரேசில், ஜப்பானில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் பிரேசிலில் 27 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது.

பெட்ரோலில் எத்தனால் கலப்பால் நாட்டுக்கு ரூ.1.4 லட்சம் கோடி அந்நியச் செலவாணி சேமிக்கப்பட்டுள்ளது. வேளாண் கழிவுகளில் இருந்து எத்தனால் எடுக்கப்படுவதால் விவசாயிகளும் பயனடைகின்றனா்.

எத்தனால் கலப்பால் வாகனங்களின் காப்பீட்டு கோரிக்கைகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுவது தவறான தகவல்’ என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments