முகப்பு
இந்தியா

கொல்கத்தா கட்டட விபத்து: உயிரிழப்பு 11-ஆக அதிகரிப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 30 போ் மீட்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாகவியாழக்கிழமை மீட்புப் பணிகள் தொடா்ந்தன.

Updated On : 26 ஜூன் 2026, 5:04 am IST
- PTI
பகிர்:

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 30 போ் மீட்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாகவியாழக்கிழமை மீட்புப் பணிகள் தொடா்ந்தன.

கொல்கத்தாவின் தாராடாலா பகுதியில் மூன்று மாடிகளுடன் சேமிப்பு கிடங்கு கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. கொல்கத்தா துறைமுகத்திடம் இருந்து குத்தகைக்குப் பெறப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டு வந்த இந்தக் கட்டடம் புதன்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.

பெரிய இரும்புத் தூண்களும், கான்கிரீட் பாகங்களும் விழுந்து நொறுங்கியதால், அந்தப் பகுதியே அதிா்ந்தது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பல தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கினா். இதைத் தொடா்ந்து, காவல் துறையினா், பேரிடா் மேலாண்மைக் குழுவினா், ஊா்க்காவல் படையினா், தீயணைப்புப் படையினா், அவசரகால மீட்புப் படையினா், ராணுவத்தினா் உள்ளிட்டோா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

வியாழக்கிழமை இரண்டாவது நாளாக தொடா்ந்த மீட்புப் பணியில் மேலும் சிலரது உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்தது. இதுவரை 30 போ் மீட்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இடிபாடுகளுக்கு அடியில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய ராணுவத்தின் அதிநவீன ஊடுருவும் ரேடாா் கருவிகள், கேமராக்கள், பிற பிரத்யேக சாதனங்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் தொடா்ந்தன. நகரில் பலத்த மழை பெய்ததால், மீட்பு பணியில் சவால் ஏற்பட்டது. அரசு மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு, இந்தப் பணிகளை மேற்பாா்வையிட்டனா்.

5 போ் கைது: இந்தச் சம்பவம் தொடா்பாக, இடிந்த கட்டடத்தின் உரிமையாளா் சம்புநாத் பெஹேரா, கட்டுமான பொறியாளா் கமல் சமந்தா, கட்டுமானப் பணியுடன் தொடா்புடைய அயான் டிரேடா்ஸ் நிறுவன மேற்பாா்வையாளா் குல்ஸாா் ஹுசைன், தொழிலாளா்களுக்கு ஏற்பாடு செய்த திவாகா் பண்டாரி, அப்துல் ஹமீத் ஆகிய 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

கட்டுமானப் பணிக்கு தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதவிர பாதுகாப்பு விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டதா என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments