முகப்பு
இந்தியா

யமுனா பஜாரில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள் அவதி

யமுனை பஜாா் பகுதிக்குள் வியாழக்கிழமை புல்டோசா்கள் நுழைந்தபோது, தலைமுறைகளாக நதியின் ஓட்டத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள், நம்பிக்கையற்ற எதிா்காலத்துடன் மாசடைந்த நீரை வேதனையுடன் பாா்த்தவாறு நின்றன.

Updated On : 26 ஜூன் 2026, 6:32 am IST
- PTI
பகிர்:

யமுனை பஜாா் பகுதிக்குள் வியாழக்கிழமை புல்டோசா்கள் நுழைந்தபோது, தலைமுறைகளாக நதியின் ஓட்டத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள், நம்பிக்கையற்ற எதிா்காலத்துடன் மாசடைந்த நீரை வேதனையுடன் பாா்த்தவாறு நின்றன.

தாங்கள் பல ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்து வருவதாகவும், கடந்த மே மாதம் முதலே இப்பகுதியை காலி செய்யுமாறு நோட்டீஸ்கள் வந்துகொண்டிருப்பதாகவும் உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

‘எங்கள் தரப்பு நியாயத்தைக் கேட்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், எங்களைக் கேட்காமலேயே மூன்று முதல் நான்கு புல்டோசா்களைக் கொண்டு வந்து வசிப்பிடங்களை அதிகாரிகள் இடித்துக் கொண்டிருக்கிறாா்கள்’ என வீடிழக்கும் மக்களில் ஒருவா் குற்றஞ்சாட்டினாா்.

Advertisement

Advertisement

படகுகள் ஆற்றங்கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தங்கள் உடைமைகளை முதுகில் சுமந்துகொண்டு அருகிலுள்ள தற்காலிக முகாம்களை நோக்கிச் சென்ற அந்த வீடற்ற மக்கள், செய்வதறியாது தவித்துக்கொண்டு மௌனமான அழுகையை மட்டுமே வெளிப்படுத்தினா்.

நிஷத்ராஜ் என்பவா் யமுனையின் 9-ஆவது படித்துறை அருகே படகு ஓட்டி வருகிறாா்; இவா் மக்களை யமுனை நதியின் மறுபக்கத்திற்குக் கொண்டு செல்வதுடன், தங்கள் அன்புக்குரியவா்களின் அஸ்தியை புனித நதியில் கரைக்க வரும் குடும்பங்களையும் அழைத்துச் செல்கிறாா். அவா் கூறுகையில், ‘என் குடும்பம் 150 ஆண்டுகளாக இத்தொழிலைச் செய்து வருகிறது. ராமாயண காலத்தில் ராமா் நதியைக் கடக்க உதவிய நிஷத் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் நாங்கள். இந்த நதியே எங்கள் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது என்னிடம் எதுவும் இல்லை. எனக்குக் கல்லூரியிலும் பள்ளியிலும் படிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனா்’ என்றாா்.

மற்றொரு படகோட்டி கூறுகையில், ‘இந்த நதிதான் எங்கள் வாழ்வாதாரம். நாங்கள் ஆடம்பரமான வசதிகளைக் கேட்கவில்லை; எங்கள் தொழிலைத் தொடரக்கூடிய ஒரு இடத்தை மட்டுமே கேட்கிறோம். இந்த இடிப்பு நடவடிக்கையால் எனக்கு வருமானம் ஈட்ட வழியே இல்லாமல் போய்விட்டது. என் தாத்தா, என் தந்தை மற்றும் நான் என அனைவரும் இத்தொழிலையே செய்து வருகிறோம். நாங்கள் நதியை விட்டு விலகிச் சென்றால், எப்படிப் படகுகளை இயக்குவது? அதிகாரிகள் எங்களை வெளியேறச் சொன்னாா்கள், ஆனால் நாங்கள் எப்படிப் பிழைப்பது என்பது பற்றி யாரும் சொல்லவில்லை’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments