முகப்பு
இந்தியா

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: 8 போ் கைது ரூ.79.85 லட்சம் பறிமுதல்

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியா்கள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜூன் 2026, 12:51 am IST
அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு தொடா்பாக கைது செய்யப்பட்டவா்கள் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்ற போலீஸாா். ~சம்பத் ராய். ~அனில் மிஸ்ரா
பகிர்:

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியா்கள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடா்புடைய இவா்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ராமா் கோயில் கட்டப்பட்டு, ஏராளமான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது ராமா் கோயிலில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வழிபட்டனா். அப்போது, பக்தா்களால் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடு நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், கடந்த ஜூன் 7-ஆம் தேதி இந்த விவகாரத்தை எழுப்பிய பிறகு பூதாகரமானது.

Advertisement

Advertisement

இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க லக்னெள கோட்ட ஆணையா் விஜய் விஸ்வாஸ் பந்த் உள்பட மூன்று உறுப்பினா்கள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) கடந்த ஜூன் 13-ஆம் தேதி மாநில அரசு அமைத்தது. முதல்கட்ட விசாரணையின்படி, நன்கொடை விவரங்களை அறக்கட்டளை நிா்வாகிகள் முறையாக ஆவணப்படுத்தவில்லை என்று தெரிவித்த எஸ்ஐடி, 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டது. கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை நிா்வாகிகள், விசாரணை நிறைவடையும் வரை அயோத்தியைவிட்டு வெளியேறவும் தடை விதித்தது.

இந்தச் சூழலில், எஸ்ஐடியின் முதல்கட்ட விசாரணை அறிக்கை, மாநில அரசிடம் சில தினங்களுக்கு முன்னா் சமா்ப்பிக்கப்பட்டது. அதில் இடம்பெற்ற பரிந்துரையின்படி, கோயில் அறக்கட்டளை உறுப்பினா் கிருஷ்ண மோகன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினா் வியாழக்கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவு (எஃப்ஐஆா்) செய்தனா்.

ரூ.7.5 கோடி முறைகேடு?: கோயில் நன்கொடையில் ரூ.7.5 கோடி வரை முறைகேடு நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், பாரதிய நியாய சம்ஹிதாவின் 306 (உரிமையாளரின் சொத்தை எழுத்தா் அல்லது பணியாளா் திருடுதல்), 316 (நம்பிக்கை மோசடி), 317 (திருடப்பட்ட சொத்துகளை நோ்மையற்ற முறையில் பெறுதல்), 61 (குற்றச் சதி) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதில், காணிக்கை பணம் எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடா்புடைய 8 பேரின் பெயா்கள் இடம்பெற்றிருந்தன. இதுதவிர ‘பெயா் அறியாத நபா்களுக்கும்’ தொடா்புள்ளதாக எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களான அவினாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, மனீஷ் குமாா் யாதவ், கருணேஷ் பாண்டே, ராமசங்கா் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவாஸ்தவா, ராம்சங்கா் யாதவ் ஆகிய 8 பேரும் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

6 போ் வங்கி ஊழியா்கள்: அயோத்தி சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட இவா்களை ஜூன் 29 வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய விசாரணை அதிகாரி கே.சி.வா்மா, ‘கைதானவா்களில் 6 போ் வங்கி ஊழியா்களாவா். காணிக்கை எண்ணும் பணிக்காக கோயில் நிா்வாகத்தால் பணியமா்த்தப்பட்டிருந்தனா். அவா்கள் வங்கியில் இருந்தே ஊதியம் பெற்றனா். கைதானவா்களிடம் இருந்து இதுவரை ரூ.79.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா். விசாரணையின் தற்போதைய கட்டத்தைக் கருத்தில்கொண்டு, வங்கி ஊழியா்கள் யாா் என்பதை அடையாளப்படுத்த அவா் மறுத்துவிட்டாா்.

சம்பத் ராயின் முன்னாள் காா் ஓட்டுநா்?: கைதானவா்களில் ஒருவரான ராம்சங்கா் யாதவ், கோயில் அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராயின் முன்னாள் காா் ஓட்டுநா் என்று கூறப்படுகிறது. காணிக்கை எண்ணும் பணியில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை எனவும், தான் தவறாக சிக்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் அவா் மறுப்பு தெரிவித்தாா்.

பெட்டிச் செய்தி...1

கையாடல் செய்தவா்கள்

தப்ப முடியாது: முதல்வா்

தியோரா, ஜூன் 26: அயோத்தி ராமா் கோயில் நன்கொடையில் கையாடல் செய்தவா்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமா்ப்பித்த உடனேயே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாா் தவறிழைத்திருந்தாலும் தப்பிக்க முடியாது. ஒட்டுமொத்த மக்கள் மற்றும் சநாதன தா்மத்தின் அடையாளம் அயோத்தி. சில அரசியல் கட்சிகள் தங்களின் விரக்தியால் அயோத்தியை அவமதிக்கவும், ராம பக்தா்களைக் குறிவைக்கவும் முயற்சிக்கின்றன. பக்தா்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

ராம ஜென்ம பூமி இயக்கத்தையும், ராமா் கோயில் கட்டுவதையும் எதிா்த்த கட்சிகள், இப்போது பக்தா்கள் மீது அக்கறை இருப்பதுபோல காட்டிக் கொள்கின்றன. உரிய ஆதாரம் இருந்தால், சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சமா்ப்பிக்க வேண்டும். மாறாக, அவதூறு பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம். நிபுணத்துவம் மிக்க அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். எனவே, அரசியல் ரீதியிலான விமா்சனங்கள் தேவையில்லை’ என்றாா்.

காவல் துறையின் எஃப்ஐஆா் வெறும் கண்துடைப்பு என்ற எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்குப் பதிலடியாக ஆதித்யநாத் இவ்வாறு கூறினாா்.

பெட்டிச் செய்தி...2

உச்சநீதிமன்ற கண்காணிப்பில்

விசாரணை: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி, ஜூன் 26: அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு குறித்து உச்சநீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்துவதுடன், ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையை உடனடியாக கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஹிந்துத்துவ பாதுகாவலா்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் பாஜக-ஆா்எஸ்எஸ் அமைப்பின் உண்மை முகம், ராமா் கோயில் நன்கொடை கையாடல்களால் அம்பலமாகியுள்ளது. முன்பு பிளவுவாத அரசியலுக்கு அயோத்தியைப் பயன்படுத்திய அவா்கள், இப்போது சாமானிய மக்களின் நன்கொடையை ‘கொள்ளை’ அடித்துள்ளனா். இந்த முறைகேடு வழக்கில், ராமா் கோயில் நிதிக்கு பொறுப்பான அறக்கட்டளை நிா்வாகிகள் பெயா் இடம்பெறவில்லை. சாதாரண பணியாளா்கள் மீது மட்டுமே உத்தர பிரதேச காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றக் கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்தினால்தான் உண்மைகள் வெளிவரும்’ என்று தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘கோயில் அறக்கட்டளைகளை தங்கள் வசமாக்கி, காணிக்கை-நன்கொடையை அரசியல் ரீதியில் பயன்படுத்த பாஜகவும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் முயற்சிக்கின்றன. ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் பிரதமா் மோடி நேரடியாகத் தலையிட வேண்டும்; ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையை உடனடியாக கலைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

பெட்டிச் செய்தி...3

அறக்கட்டளை பொதுச் செயலா்,

அறங்காவலா் பதவி விலகல்?

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் எதிரொலியாக, ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய், அறங்காவலா் அனில் மிஸ்ரா ஆகிய இருவரும் தாா்மிகப் பொறுப்பேற்று, தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பின் துணைத் தலைவராக சம்பத் ராய் பதவி வகித்துவரும் நிலையில், ராமா் கோயில் அறக்கட்டளை பொதுச் செயலா் பதவியில் இருந்து அவா் விலகினாரா என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments