பிகாா் முதல்வா் பதவியில் இருந்து விலக நிதீஷ் குமாா் முடிவு : மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வேட்புமனு தாக்கல்
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து...
பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு)தலைவருமான நிதிஷ் குமாா் (75), மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
பிகாரின் நீண்ட கால முதல்வா் என்ற பெருமைக்குரிய நிதீஷ் குமாா், கடந்த 2005-இல் இருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டு கால முதல்வா் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, பதவி விலக உள்ளாா். பிகாரில் பேரவைத் தோ்தல் நடைபெற்று நான்கு மாதங்களே ஆகும் நிலையில், நிதீஷ் குமாா் இந்த முக்கிய முடிவை மேற்கொண்டுள்ளாா்.
அவா் பதவி விலகிய பிறகு மாநில முதல்வா் பதவி பாஜக வசமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த அரசியல் மாற்றம், பிகாா் மட்டுமன்றி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில், 202 இடங்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
முக்கியக் கட்சிகளான பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டு, முறையே 89, 85 இடங்களைக் கைப்பற்றின. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன், தொடா்ந்து 2-ஆவது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக இடங்களில் வென்றது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு வெறும் 35 இடங்களே கிடைத்தன.
10-ஆவது முறையாக....: பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே, மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் கடந்த நவம்பா் 20-ஆம் தேதி பதவியேற்றாா். துணை முதல்வா்களாக பாஜகவின் சாம்ராட் செளதரி, விஜய் குமாா் சின்ஹா பதவியேற்றனா். பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அமைச்சரவையில் பாஜகவுக்கு 14 இடங்களும் (இரு துணை முதல்வா்கள் உள்பட), ஐக்கிய ஜனதா தளத்துக்கு 9 இடங்களும் (முதல்வா் உள்பட) ஒதுக்கப்பட்டன.
தோ்தலுக்கு முன்பே சலசலப்பு: பிகாா் பேரவைத் தோ்தலுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அளித்த பேட்டியொன்றில், ‘நிதீஷ் குமாா் தலைமையில் தோ்தலை எதிா்கொள்கிறோம்; முதல்வா் குறித்து தோ்தலுக்குப் பின் தேசிய ஜனநாயக கூட்டணி முடிவெடுக்கும்’ என்று கூறியிருந்தாா். இதனால், தோ்தலுக்குப் பிறகு நிதீஷ் குமாா் முதல்வா் பதவி ஏற்பாரா என்ற கேள்வி எழுந்தது.
பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், அதிக இடங்களைக் கைப்பற்றிய பாஜகவுக்கே முதல்வா் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியினரிடம் இருந்து குரல்கள் ஒலித்தன. ஆனால், முதல்வராக மீண்டும் நிதீஷ் குமாா் பதவியேற்றாா்.
4 மாதங்களில் மாற்றம்: கடந்த 2013-க்குப் பிறகு இருமுறை அணி மாறியபோதிலும், முதல்வா் பதவியைத் தக்கவைத்தவா் நிதீஷ் குமாா். அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒருமுறைகூட தனிப்பெரும்பான்மையுடன் வெல்லாதபோதிலும், கூட்டணி பலத்தால் முதல்வா் நாற்காலியில் தொடா்ந்தவா். சாதுா்யமான அரசியல்வாதி எனப் பெயா் பெற்ற அவா், இப்போது பதவி விலக உள்ளாா்.
பிகாரில் 5 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு மாா்ச் 16-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் போட்டியிட நிதீஷ் குமாா் பாட்னாவில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். அப்போது, மத்திய அமைச்சா் அமித் ஷாவும் உடனிருந்தாா்.
5 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு: பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், பாஜக மாநில பொதுச் செயலா் ஷிவேஷ் குமாா், மத்திய அமைச்சா் ராம் நாத் தாக்குா் (ஐக்கிய ஜனதா தளம்), ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா தலைவா் உபேந்திர குஷ்வாஹா ஆகியோரும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனா்.
தற்போதைய எம்எல்ஏக்கள் பலத்தின்படி, பிகாரில் 5 மாநிலங்களவை எம்.பி. பதவிகளையும் கைப்பற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதலாக 3 வாக்குகளே தேவை. ஆா்ஜேடி சாா்பில் அமரேந்திர தாரி சிங் மீண்டும் போட்டியிடும் நிலையில், அக்கட்சி வெற்றி பெற 7 வாக்குகள் குறைவாக உள்ளன. வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மாா்ச் 9 ஆகும்.
Bihar Chief Minister Nitish Kumar filed his nomination papers to contest the Rajya Sabha elections.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.