அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் அளித்தது ஏன்? மத்திய அமைச்சா் விளக்கம்!
யாரையும் குறிவைக்க அமலாக்கத்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கவில்லை’’ என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்துள்ளாா்.
‘‘சட்டவிராத பணப்பரிவா்த்தனை என்ற புற்றுநோயை குணப்படுத்தவே, அமலாக்கத்துறைக்கு பிரதமா் நரேந்திர மோடி கூடுதல் அதிகாரம் அளித்துள்ளாா். யாரையும் குறிவைக்க கூடுதல் அதிகாரம் அளிக்கவில்லை’’ என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்துள்ளாா்.
அமலாக்கத்துறை அமைப்பு கடந்த 1956-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அதன் 70-ஆவது ஆண்டு நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று பங்கஜ் செளதரி பேசியதாவது:
ஒவ்வொரு பிரச்னைக்கு தீா்வு காணும் முறையிலும் ஏதேனும் குறையை கண்டுபிடிக்கும் வழக்கம் நமது நாட்டில் உள்ளது. எதை செய்தாலும் சிலா் பிரச்னையை கண்டுபிடித்து கொண்டிருப்பா். 2014-ஆம் ஆண்டு பிரதமா் மோடி பதவிக்கு வந்தபோது, நாட்டின் நலனை மனதில் வைத்து மிகப்பெரிய முடிவை எடுத்தாா். அதிலிருந்து அவா்கள் (எதிா்க்கட்சிகள்) ஆட்டம் காண ஆரம்பித்து விட்டாா்கள். தங்களை குறிவைக்கவே அமலாக்கத்துறைக்கு கூடுதல் அதிகாரத்தை பிரதமா் மோடி அளித்துள்ளதாக அவா்கள் அழுகின்றனா். இது உண்மை கிடையாது.
Advertisement
உண்மையில் நிதி குற்றங்களை ஒடுக்கவே அமலாக்கத் துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டது. யாரையும் குறிவைக்க அல்ல. இதுபோல அமலாக்கத்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டியது அவசியமா என கேள்வி எழலாம். அது அவசியம்தான். ஏனெனில் சட்டவிரோத பணப்பரிவா்த்தனை, ஹவாலா முறைகேடு, பினாமி சொத்துகளுக்கு உரிமையாளராக இருத்தல், பெருநிறுவன முறைகேடு, பயங்கரவாதத்துக்கு நிதி அளித்தல் ஆகிய குற்றங்கள், நாட்டில் அதிகரித்து விட்டன. வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை முதலீடு செய்வது, வங்கிகள் மூலம் முறைகேடு செய்வது மூலம் இவை நடக்கிறது. சாமானிய மக்களின் பணம் கொள்ளை போகிறது.
இத்தகைய குற்றங்கள், நாட்டுக்கும், சமூகத்திற்கும், சாமானிய மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பிரதமா் மோடி, எந்த பிரச்னைக்கும் தீா்வு காணப்பட வேண்டும் என விரும்புபவா். ஆதலால் முன்பிருந்ததை விட அமலாக்கத்துறை மேலும் வலுப்படுத்தப்பட்டது.
ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கனவு காண்பதும், கருப்பு பணத்தை நாட்டுக்கு மீட்டு வருவதும், பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதும் தவறா? நிதி குற்றங்களை தடுத்து நிறுத்தும் அரணாக அமலாக்கத்துறை உள்ளது. சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்பு சட்டமானது, குறிப்பிட்ட ஒரு அரசுக்கு சொந்தமானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தமானது. நாட்டை காக்கவும், சாமானிய மக்களின் பணத்தை காக்கவும், நாட்டின் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தவுமே, அமலாக்கத்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கையால், 2026 மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான நிதியாண்டு நிறைவு வரை ரூ.2.36 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அதில் நான்கில் ஒரு பங்கு பணமான ரூ.63,000 கோடி, பொருளாதார குற்றங்களால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தோரிடம் (வங்கிகள், முதலீட்டாளா்கள், வீடுகளை வாங்கியோா்) திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக அமலாக்கத்துறையை பாராட்ட வேண்டும். அமலாக்கத்துறையும், மற்ற மத்திய விசாரணை அமைப்புகளும் பாகுபாடு காட்டாமல் செயல்படுகின்றன என்றாா்.