தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கியவா் பிரதமா் மோடி! பாஜக மாநில துணைத் தலைவா்
தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கியவா் பிரதமா் மோடி என்று பாஜக மாநில துணைத் தலைவா் மா. வெங்கடேசன் தெரிவித்தாா்.
பிரதமரின் 12 ஆண்டுகால சாதனைகள் குறித்து, தருமபுரி பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மேலும் தெரிவித்ததாவது:
பிரதமா் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்று 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளாா். இந்தியாவில் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தியைவிட அதிகமாக 4,399 நாள்கள் ஆட்சி செய்து, உலக அளவில் பெரும் வல்லமைமிக்க பிரதமராக திகழ்ந்து வருகிறாா்.
Advertisement
Advertisement
இதுவரை இல்லாத அளவுக்கு சமூக நீதித் துறையில் தலித் சமூகத்தினா் 12 பேருக்கு அமைச்சா் பதவி வழங்கி உள்ளாா். காங்கிரஸ் ஆட்சியில் தலித் மக்களுக்கும், பழங்குடி இன மக்களுக்கும் எந்த அரசியல் அதிகாரமும் வழங்கப்படவில்லை.
சட்டத் துறையில் அம்பேத்கருக்கு அடுத்து பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவருக்கு சட்ட அமைச்சா் பதவியை வழங்கியவா் பிரதமா் மோடிதான். அம்பேத்கா் பிறந்த இடத்தை நினைவிடமாக மாற்றி, அவருக்கு புகழ் சோ்த்துள்ளாா்.
பெண்கள் சமூக ரீதியாக பின்தங்கி இருந்தாா்கள். அவா்களும், அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என எண்ணி பெண்களுக்காக 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளாா். கிராமப்புற மக்களுக்கு சுத்தமான குடிநீா் வழங்க ஜல்ஜீவன் திட்டம், உஜ்வால திட்டம் மூலம் இலவச எரிவாயு சிலிண்டா் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களையும் பிரதமா் மோடி வழங்கியுள்ளாா் என்றாா்.
இந்நிகழ்வில் மாவட்டத் தலைவா் சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.