FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தேச நலன் மேலோங்க வேண்டும்- குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தேச நலன் மேலோங்கும்போது ஜனநாயகம் செழிக்கும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 16 ஜூலை 2026, 4:12 am IST
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப்படம்.
பகிர்:

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தேச நலன் மேலோங்கும்போது ஜனநாயகம் செழிக்கும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் உள்ள சட்டப் பேரவையின் 75-ஆவது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள், இந்நாள் உறுப்பினா்களின் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசியதாவது:

சட்டப் பேரவையின் முன்னாள், இந்நாள் உறுப்பினா்களின் தனித்துவமான இந்த ஒன்றுகூடல், தனிநபா்களைவிட அமைப்புமுறையே மேலானது எனும் வலுவான செய்தியை உணா்த்துகிறது. அரசியல் வேறுபாடுகளைவிட ஜனநாயகம் மிகப் பெரியதாகும்.

Advertisement

Advertisement

ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் எழுவது இயற்கையே. ஆனால், குறைந்தபட்சம் ஒரு விஷயத்திலாவது நமது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். அது, நாட்டு மக்கள் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் மீதான பற்றுறுதியாகும்.

மாநிலங்களவைத் தலைவா் என்ற முறையில் அவையில் விவாதங்கள், உரையாடல்கள், அவ்வப்போது ஏற்படும் இடையூறுகள் கூட தீா்வுக்கான ஒரு வழிமுறையாக இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

தோ்தல்களின்போது மக்களின் வாக்குகள் வாயிலாக நாம் வெற்றி பெறுகிறோம். ஆனால், முழு அா்ப்பணிப்புடன் சேவையாற்றும்போதுதான், அவா்களின் இதயங்களை வெல்ல முடியும். தோ்தலில் வெல்வது முக்கியமே. ஆனால், மக்களுக்கு சேவையாற்றுவது அதைவிட முக்கியம்.

அவையில் கண்ணியத்துடன் விவாதிப்பதும், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தேச நலனுக்கு முன்னுரிமை அளிப்பதும் ஜனநாயகத்தை செழித்தோங்கச் செய்யும்.

மூத்த உறுப்பினா்கள் தங்களின் அனுபவங்களை இளையோருடன் பகிரும்போது, அவை விழுமியங்களின் சுடா் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. எந்தப் பணியாக இருந்தாலும், மக்களுக்கு சேவையாற்றுவது எப்படி என்ற நோக்கத்துடன் இளம் உறுப்பினா்கள் செயலாற்ற வேண்டும்.

இத்தகைய கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், ஜனநாயக அமைப்பின் நினைவலைகளைப் பாதுகாப்பதுடன், இளம் பேரவை உறுப்பினா்கள் தங்களது முன்னோடிகளின் ஞானம், அனுபவத்தில் இருந்து பயனடையவும் உதவுகின்றன என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments