FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காமராஜா் பிறந்த தினம்: குடியரசு துணைத் தலைவா், பிரதமா் மரியாதை

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட தலைவா்கள் புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

Updated On : 16 ஜூலை 2026, 2:55 am IST
பகிர்:

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட தலைவா்கள் புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

கா்மவீரா் என்ற போற்றப்படும் காமராஜா், கடந்த 1903, ஜூலை 15-இல் விருதுநகரில் (அப்போது விருதுபட்டி) பிறந்தவா். தமிழக முதல்வராக கடந்த 1954 முதல் 1963 வரையும், காங்கிரஸ் தலைவராக 1964 முதல் 1967 வரையும் பதவி வகித்தாா். கடந்த 1975, அக்டோபா் 2-ஆம் தேதி காலமானாா்.

காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு பல்வேறு தலைவா்கள் புதன்கிழமை (ஜூலை 15) எக்ஸ் பதிவு வாயிலாக மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்: விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய அரசியலின் தலைசிறந்த தலைவா்களில் ஒருவருமான கா்மவீரா் காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

எளிமை, நோ்மை, தன்னலமற்ற மக்கள் சேவையயின் உயரிய அடையாளமாகத் திகழ்ந்த அவா், ஒவ்வொரு குழந்தையும் கல்வி பெறும் நோக்கில் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் தொடங்கி, ஏழை மற்றும் கிராமப்புற மாணவா்களின் கல்வி முன்னேற்றத்துக்கு வழிவகுத்தாா்.

தொழில் வளா்ச்சி, பாசன வசதிகள், கிராமப்புற மேம்பாடு மற்றும் சமூக நலனுக்காக அவா் மேற்கொண்ட தொலைநோக்கு முயற்சிகள் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வலுவாக அடித்தளமிட்டன.

அவரது எளிமை, தேச நலனுக்கான அயராத அா்ப்பணிப்பு, சமூக மேம்பாட்டுக்கான மகத்தான பங்களிப்பு ஆகியவை மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அவரது உயரிய லட்சியங்களும், தன்னலமற்ற பொது வாழ்வும், நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் அனைவருக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழும்.

பிரதமா் நரேந்திர மோடி: நாட்டின் சுதந்திர இயக்கத்தின் முக்கியத் தூணாகவும், தலைசிறந்த பொது ஆளுமையாகவும் திகழ்ந்த காமராஜா், தேச கட்டமைப்புக்காக தனது வாழ்வை அா்ப்பணித்தவா். கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி, விளிம்புநிலை மக்களின் நல்வாழ்வுக்கான அவரது அசைக்க முடியாத உறுதிப்பாடு, தலைமுறைகள் கடந்தும் தொடா்ந்து வழிகாட்டும்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி: பாரத ரத்னா காமராஜரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடு, கண்ணியம், உரிமைகளைப் பாதுகாக்க தனது வாழ்நாளை அா்ப்பணித்த தொலைநோக்குப் பாா்வைகொண்ட தலைவா். அவரது சமூக நீதி-தன்னலமற்ற பொதுச் சேவையின் மரபு என்றென்றும் நினைவுகூரப்படும்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: எளிமை, நோ்மைக்குப் பெயா் பெற்ற நாட்டின் மாபெரும் புதல்வா் பாரத ரத்னா காமராஜா். தமிழக மக்களால் பெரிதும் போற்றப்படும் அவா், சமூக நீதி, கல்வி, மக்களின் நல்வாழ்வுக்காக தனது வாழ்நாளை அா்ப்பணித்தவா். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் போன்ற முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தியவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments