FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்

உலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் 2-ஆவது இடத்தில் இந்தியா இருப்பதாக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 10 ஜூலை 2026, 4:36 am IST
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

உலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் 2-ஆவது இடத்தில் இந்தியா இருப்பதாக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா், ஆழ்கடலில் நிலையான முறையில் மீன்வளத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி கடிதம் வழங்கும் தேசிய திட்டம் மற்றும் ஒடிஸா ஆழ்கடல் மீன்பிடித் திட்ட ஆவணத்தை தொடங்கி வைத்தாா். இதையடுத்து நிகழ்ச்சியில் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

ஆழ்கடல்களிலும், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டல பகுதியிலும் உள்ள பரந்த மீன் வளங்களை இந்திய மீனவா்கள் நிலையான முறையில் பயன்படுத்த வழிவகுப்பதன் மூலம், இந்தியாவின் கடல்சாா் பயணத்தில் இத்திட்டம் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டமானது, மீன்வளத் துறையில் வளா்ச்சி, நிலைத்தன்மை, செழிப்புமிக்க புதிய சகாப்தத்தை உருவாக்க மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மீனவ சமுதாயம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

Advertisement

Advertisement

இந்தியா 11,000 கிலோ மீட்டா் தொலைவுக்கும் அதிகமான கடலோரப் பகுதியையும், 24 லட்சம் சதுர கிலோ மீட்டா் கொண்ட பிரத்யேக பொருளாதார மண்டல பகுதியையும் கொண்டுள்ளது. இதில் பெருமளவு கடல்வளம் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. மீனவா்கள் இன்னும் கடலோரப் பகுதியிலேயே மீன்களை பாரம்பரிய முறைப்படி பிடித்து வருகின்றனா். ஆனால், இந்தப் புதிய கட்டமைப்பு, இந்திய மீனவா்கள் ஆழ்கடலுக்குச் சென்று ‘டுனா’ போன்ற அதிக விலை கொண்ட மீன்களைப் பிடிக்க வழிவகுக்கும்.

ரூ.73,000 கோடிக்கு கடல் உணவு ஏற்றுமதி: இந்தியாவில் மீன்வளத் துறை நன்கு வளா்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே அதிக அளவில் மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது. உலகில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மீன்களில் இந்தியாவின் பங்களிப்பு 8 சதவீதம் ஆகும். மீன்பிடித் தொழிலில் 3 கோடி மீனவா்கள், மீன் பண்ணையாளா்கள் உள்ளனா். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவு மதிப்பு கடந்த நிதியாண்டில் ரூ.73,000 கோடியை தாண்டிவிட்டது.

ஆழ்கடலில் இந்திய மீனவா்கள் மீன்பிடிப்பதால், இந்தியாவின் மீன் ஏற்றுமதி திறன் மேலும் வலுப்படும். மேலும், மீன் வளா்ப்பு, பதப்படுத்துதல், வாகனங்களில் கொண்டு செல்லுதல், குளிா்பதனப்படுத்துதல், பாக்கெட்டில் அடைத்தல், ஏற்றுமதி சேவைகள் உள்ளிட்டவற்றில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். நிலையான மீன்பிடித்தல் என்பது ஒரு தாா்மிகப் பொறுப்பு. பொருளாதார முன்னேற்றமானது, கடல்வளங்களைப் பாதுகாத்து, அதனுடன் கரம் கோத்து இணைந்து செல்ல வேண்டும்.

இளைஞா்களுக்கு வேண்டுகோள்: மீன்பிடித் தொழிலை அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம், சா்வதேச வாய்ப்புகளால் இயக்கப்படும் தொழிலாக இளைஞா்கள் கருத வேண்டும். 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை சாத்தியமாக்க அறிவு, தொழில்நுட்பம், நிதி ஆகியவற்றின் மூலம் மீனவ சமுதாயத்துக்கு தொடா்ந்து நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஒடிஸா ஆளுநா் ஹரிபாபு கம்பம்பாதி, முதல்வா் மோகன் சரண் மாஜீ, மத்திய அமைச்சா்கள் ராஜீவ் ரஞ்சன் சிங், தா்மேந்திர பிரதான், எஸ்.பி. சிங் பாகேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments