மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு! - தேர்தல் ஆணையம்
மறு வாக்குப்பதிவு குறித்த தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவு பற்றி
கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (மே. 2) அறிவித்தது.
ஃபால்டா (144) சட்டப்பேரவைத் தொகுதியில், வன்முறைகள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அத்தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப். 29-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் தேர்தல் நடைமுறை கடுமையாக மீறப்பட்டதை உறுதி செய்துள்ள தேர்தல் ஆணையம் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 அன்று நடைபெறவுள்ளது.
இதனிடையே, 2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது எழுந்த புகார்கள், முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக மேற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் இரு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மேற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள மக்ராத் பஸ்சிம் தொகுதியில் உள்ள 11 வாக்குச்சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் பகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு சனிக்கிழமை (மே. 2) நடைபெற்றது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள 144-ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் குறிப்பாக, ஆளுங்கட்சி தரப்பு பிரமுகர்கள் வாக்காளர்களுக்கு மிரட்டல் விடுப்பதாக அப்பகுதி மக்கள் புகார்கள் அளித்து மறு வாக்குப்பதிவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் தங்களுக்குச் சாதகமாக இல்லையெனில் அங்குள்ள வீடுகள் தீக்கிரையாகும் என்றும் சிலர் மிரட்டியிருப்பதாக மக்கள் புகார் தெரிவித்திருப்பதாக களத்திலிருந்து வரும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
இதனையடுத்து, வாக்குப்பதிவு நாளில் எழுந்த புகார்கள், முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் அங்கு மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
மறு வாக்குப்பதிவு குறித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், “ஃபால்டா தொகுதிக்குள்பட்ட பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப். 29-இல் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது தேர்தல் விதிமுறைகள் மிகத் தீவிரமாக மீறப்பட்டிருப்பதைக் கருத்திற்கொண்டு அங்குள்ள துணை வாக்குச்சாவடிகள் உள்பட 285 வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை வருகிற மே. 24 அன்று நடைபெறவுள்ளது.