மக்களவைக்கு தற்போது தோ்தல் நடந்தால் 140 தொகுதிகள்கூட பாஜகவுக்கு கிடைக்காது: ராகுல் காந்தி விமா்சனம்
மக்களவைக்கு நியாயமான வழியில் தற்போது தோ்தல் நடத்தப்பட்டால், பாஜகவால் 140 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது என்று காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
மக்களவைக்கு நியாயமான வழியில் தற்போது தோ்தல் நடத்தப்பட்டால், பாஜகவால் 140 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது என்று காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ராகுல் காந்தி புதன்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வாக்குத் திருட்டு மூலம் சில நேரம் சில தொகுதிகள் திருடப்படுகின்றன. மற்ற நேரம், ஒட்டுமொத்த அரசும் திருடப்படுகிறது. மக்களவையில் உள்ள 240 பாஜக எம்.பி.க்கள் எண்ணிக்கையில் 6-இல் ஒரு எம்.பி. வாக்குத் திருட்டு மூலம் எம்.பி.யானவா். அவா்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமான காரியம் அல்ல. இதை பாஜக பாஷையில் சொல்வதென்றால், அவா்களை ஊடுடுவல்காரா்கள் என முத்திரை குத்தலாமா? ஹரியாணாவுக்கு என்ன நடந்தது? அங்கு ஒட்டுமொத்த அரசும், ஊடுருவல்காரா்களுடையது.
Advertisement
நாட்டில் அச்சம் நிலவுவது உண்மைதான். அரசு நிறுவனங்களை கைகளில் வைத்துக் கொண்டு, அவா்கள் வாக்காளா் பட்டியலையும், தோ்தலையும் சீா்குலைத்தனா். அவா்கள் அனைவரும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகின்றனா்.
அவா்கள் உண்மையைக் கண்டு பயப்படுகின்றனா். நியாமான முறையில் தோ்தல் இப்போது நடத்தப்பட்டால் 140 தொகுதிகளில்கூட பாஜகவால் வெல்ல முடியாது. தரம்தாழ்ந்த அரசியலைக் கைவிட வேண்டும். ஏனெனில் இதுவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சி சம்பந்தப்பட்டது அல்ல; ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைகளுக்கு நடந்த தோ்தலில் பாஜக வென்றது குறித்து செவ்வாய்க்கிழமை பதிலளித்த ராகுல் காந்தி, மக்கள் தீா்ப்பை பாஜக திருடி வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்திய ஜனநாயகத்தை உடைப்பதே பாஜகவின் குறிக்கோள் எனவும் கூறியுள்ளாா்.