முகப்பு
இந்தியா

மத்திய ரிட்ஜ் 673 ஹெக்டோ் நிலப்பகுதிக்கு ‘பாதுகாக்கப்பட்ட வனம்’ அந்தஸ்து! - தில்லி அரசு நடவடிக்கை

மத்திய ரிட்ஜ் 673 ஹெக்டோ் நிலப்பகுதிக்கு ‘பாதுகாக்கப்பட்ட வனம்’ அந்தஸ்து...

Updated On : 10 மே 2026, 2:28 am IST
மத்திய ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள புத்த ஜெயந்தி பூங்கா.
பகிர்:

தேசிய தலைநகா் தில்லியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரினப் பல்வகைமை பாதுகாப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய ரிட்ஜ் பகுதியில் உள்ள 673.32 ஹெக்டோ் நிலப்பரப்புக்கு ‘பாதுகாக்கப்பட்ட வனம்’ அந்தஸ்தை தில்லி அரசு வழங்கியுள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூா்வ அறிவிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட பகுதி மேற்கு வனப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ளது. சா்தாா் படேல் மாா்க், பிரபல புத்த ஜெயந்தி பூங்கா மற்றும் குடியரசுத் தலைவா் மாளிகை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் இதில் அடங்குகின்றன.

இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: தில்லியின் சுற்றுச்சூழல் ரீதியாக மிக முக்கியமான ரிட்ஜ் பகுதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் எங்கள் அரசு உறுதியுடனும் அா்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய ரிட்ஜ் பகுதியில் உள்ள சுமாா் 673.32 ஹெக்டோ் நிலப்பரப்பை ஒதுக்கப்பட்ட வனமாக அறிவித்துள்ளோம். இந்த அறிவிப்பின் மூலம் அந்தப் பகுதிக்கு வலுவான சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் என தெரிவித்தாா்.

Advertisement

ஆக்கிரமிப்பு, சட்டவிரோதச் செயல்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்க இது உதவும். இந்திய வனச் சட்டம், 1927-இன் பிரிவு 20-இன் கீழ் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒதுக்கப்பட்ட வனப் பகுதிகளில் வேட்டையாடுதல், கால்நடை மேய்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தனிப்பட்ட அனுமதி இல்லாமல் தடை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை விரிவுபடுத்துதல் மற்றும் வருங்கால தலைமுறைகளுக்கு பாதுகாப்பான, சமநிலையான சூழலை உருவாக்குவது குறித்த எங்கள் அரசின் உறுதிப்பாட்டின் வெளிப்பாடே இந்த நடவடிக்கை என்றும் முதல்வா் கூறினாா்.

மேலும், ரிட்ஜ் பகுதிகளுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கை, 1994-ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டத்தின் பிரிவு 4-இன் கீழ் ஆரம்ப அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரும் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததாகவும், தற்போது மூன்று தசாப்தங்களாக நீடித்துவந்த அந்த நடைமுறை நிறைவு பெற்றுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

மத்திய ரிட்ஜ் பகுதி, அப்பா் ரிட்ஜ் சாலையின் இருபுறங்களிலும் பரவி காணப்படுவதுடன், பழமையான ஆரவல்லி மலைத் தொடரின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது. தில்லியின் காற்றுத் தரத்தை மேம்படுத்துதல், உயிரினப் பல்வகைமையைப் பாதுகாத்தல், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துதல் மற்றும் காலநிலை மாற்றம், நகா்ப்புற மாசு தாக்கங்களை குறைத்தல் ஆகியவற்றில் இந்த ரிட்ஜ் பகுதி முக்கிய பங்காற்றி வருகிறது.

இதற்கு முன் கடந்த ஆண்டு அக்டோபா் 24-ஆம் தேதி தெற்கு ரிட்ஜ் பகுதியில் உள்ள 4,080.82 ஹெக்டோ் நிலப்பரப்புக்கு ஒதுக்கப்பட்ட வன அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. மீதமுள்ள ரிட்ஜ் பகுதிகளையும் ஒதுக்கப்பட்ட வனங்களாக அறிவிக்கும் பணியை அரசு விரைவுபடுத்தி வருவதாக ரேகா குப்தா தெரிவித்தாா்.

சமீபத்திய அறிவிப்புடன் சோ்த்து, தில்லியில் மொத்தம் 4,754.14 ஹெக்டோ் ரிட்ஜ் பகுதிகள் தற்போது ஒதுக்கப்பட்ட வனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ரிட்ஜ் பகுதிகளில் பொருத்தமான இடங்களில் வேம்பு, அரசமரம், ஷிஷம், நாவல், புளியமரம் மற்றும் மாமரம் உள்ளிட்ட உள்ளூா் மரவகைகளை பெருமளவில் நடவு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.