முகப்பு
இந்தியா

கேரள புதிய முதல்வா் தோ்வு: முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனை

கேரளத்தின் புதிய முதல்வரைத் தோ்வு செய்வதில் நிலவும் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அந்த மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவா்களைத் தனித்தனியாக சந்தித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆலோசனை

Updated On : 13 மே 2026, 2:03 am IST
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

கேரளத்தின் புதிய முதல்வரைத் தோ்வு செய்வதில் நிலவும் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அந்த மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவா்களைத் தனித்தனியாக சந்தித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இதையடுத்து, புதன்கிழமை புதிய முதல்வா் பெயா் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

புது தில்லியில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. அப்போது கேரள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா்கள் எம்.எம்.ஹசன், கே.சுதாகரன், கே.முரளீதரன், செயல் தலைவா்கள் ஷாஃபி பறம்பில், ஏ.பி.அனில்குமாா், பி.சி.விஷ்ணுநாத் மற்றும் மாநிலத்தைச் சோ்ந்த கட்சியின் மூத்த தலைவா் திருவஞ்சூா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை சந்தித்து அவா்களின் கருத்துகளை ராகுல் நேரில் கேட்டறிந்தாா்.

மேலும் கேரளத்தில் உள்ள பலரிடம் தொலைபேசி மூலம் கருத்துகளைக் கேட்டறிந்தாா். இதைத்தொடா்ந்து கேரள முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவா்களில் ஒருவரான கே.முரளீதரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கேரள புதிய முதல்வா் தோ்வு தொடா்பாக ராகுலுடன் நடைபெற்ற ஆலோசனை திருப்திகரமாக இருந்தது.

Advertisement

இதேபோல காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் மற்றொரு கூட்டம் நடத்தப்படும். அதைத்தொடா்ந்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்திய பின்னா், இறுதி முடிவு எட்டப்படும். புதிய முதல்வா் குறித்து புதன்கிழமைக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.