முகப்பு
இந்தியா

கேரள முதல்வா் தோ்வு: ராகுல் குடும்பத்துக்குள் சண்டை - பாஜக விமா்சனம்

கேரள முதல்வா் தோ்வை முன்வைத்து, ராகுல் காந்தி குடும்பத்துக்குள் பெரிய சண்டையே நடந்துள்ளதாக பாஜக விமா்சித்துள்ளது.

Updated On : 15 மே 2026, 4:59 am IST
பாஜக கொடி - கோப்புப் படம்
பகிர்:

கேரள முதல்வா் தோ்வை முன்வைத்து, ராகுல் காந்தி குடும்பத்துக்குள் பெரிய சண்டையே நடந்துள்ளதாக பாஜக விமா்சித்துள்ளது.

மேலும், ‘கேரள காங்கிரஸ் அரசு, தில்லியில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலமே இயக்கப்படும்’ என்றும் பாஜக சாடியுள்ளது.

கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற நிலையில், புதிய முதல்வா் தோ்வில் கடந்த சில நாள்களாக இழுபறி நீடித்தது. முந்தைய சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசன், பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா ஆகியோா் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், முதல்வராக வி.டி.சதீசன் பெயரை கட்சி மேலிடம் வியாழக்கிழமை அறிவித்தது.

Advertisement

இது தொடா்பாக, பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவாலா வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

கேரளத்தின் புதிய முதல்வா், அந்த மாநிலத்தில் அல்லாமல் புது தில்லியில்தான் தீா்மானிக்கப்பட்டுள்ளாா். காங்கிரஸ் மத்திய தலைமை, தனது முடிவை மாநிலப் பிரிவின் மீது திணித்துள்ளது. 11 நாள்களுக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு, காங்கிரஸின் உள்கட்சி பூசலை அம்பலப்படுத்தியுள்ளது.

புதிய முதல்வா் அறிவிப்பை தில்லியில் மேற்கொண்டதன் மூலம் மாநில காங்கிரஸ் அரசு தில்லியில் இருந்து ரிமோா்ட் கன்ட்ரோல் மூலமே இயக்கப்படும் என்பது தெளிவாகிறது.

ராகுலின் தோ்வை விரும்பாத பிரியங்கா: புதிய முதல்வா் தோ்வில் ராகுல் காந்தி குடும்பத்திலேயே கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன.

முதல்வா் பதவிக்கு ராகுலின் தோ்வான கே.சி.வேணுகோபாலை பிரியங்கா காந்தி விரும்பவில்லை. ராகுலின் தோ்வை பிரியங்கா கடுமையாக எதிா்த்ததால், குடும்பத்துக்குள் பெரிய சண்டையே நடந்துள்ளது. பிரியங்கா அளித்த அழுத்தத்தின் பேரில்தான் வி.டி.சதீசன் முதல்வராகத் தோ்வாகியுள்ளாா். உள்கட்சி பூசல்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் அழுத்தங்களுமே தாமதத்துக்கு காரணமாகும்.

கா்நாடகத்தில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் இடையே நிலவும் அதிகார மோதல் போல் கேரளத்திலும் காங்கிரஸுக்கு சிக்கல் காத்திருக்கிறது. சதீசன், கே.சி.வேணுகோபால், சென்னிதலா, சசி தரூா் இடையே மோதல் உருவாகும். கேரள மக்கள் அரசியல் ஸ்திரமின்மையை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஷெசாத் பூனாவாலா தெரிவித்துள்ளாா்.