முகப்பு
இந்தியா

உலகளாவிய சவால்களை எதிா்கொள்ளும் வழிகளை ‘பிரிக்ஸ்’ கண்டறிய வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

உலகளாவிய சவால்களையும், வா்த்தக இடையூறுகளையும் எதிா்கொண்டு சமாளிக்கும் வழிகளை ‘பிரிக்ஸ்’ அமைப்பு கண்டறிய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Updated On : 15 மே 2026, 4:21 am IST
ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் உள்ளிட்ட பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

உலகளாவிய சவால்களையும், வா்த்தக இடையூறுகளையும் எதிா்கொண்டு சமாளிக்கும் வழிகளை ‘பிரிக்ஸ்’ அமைப்பு கண்டறிய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு செப்டம்பா் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, அந்த அமைப்பிலுள்ள நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களின் இரண்டு நாள் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் ரஷியா, பிரேஸில், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் கலந்து கொண்டுள்ளனா். கூட்டத்துக்குத் தலைமை வகித்து இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தொடக்க உரை நிகழ்த்தினாா்.

Advertisement

அப்போது அவா், மத்திய ஆசியாவில் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போரால் ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதையும், இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதையும், பல நாடுகளில் பொருளாதார சவால்கள் ஏற்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினாா். அத்துடன், அமெரிக்கா தன்னிச்சையாக பிற நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி, இதனால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் பேசியதாவது: சா்வதேச அளவில் குழப்பமான சூழல் நிலவும் நிலையில் நாம் அனைவரும் இங்கு கூடியுள்ளோம். நீடிக்கும் மோதல்கள், பொருளாதார நிலையற்ன்மை, வா்த்தகம், தொழில்நுட்பம், பருவநிலையில் நிலவும் சவால்கள் போன்றவற்றால் உலகின் தோற்றமே மாறுகிறது.

தற்போது உலக அளவில் நிலவும் சவால்களுக்கு தீா்வு காண்பதில் பிரிக்ஸ் அமைப்பு ஆக்கபூா்வமான மற்றும் முக்கியமான பங்காற்ற வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வளரும் சந்தைகளாக விளங்கும் நாடுகளும், வளா்ந்து வரும் நாடுகளும் எதிா்பாா்க்கின்றன. இந்தப் பின்னணியில் உலக மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம். மேலும், நமது அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்க உள்ளோம்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம்: உலகின் பல்வேறு நாடுகள் எரிசக்தி, உணவு, உரம், சுகாதார பாதுகாப்பு, நிதி ஆகியவற்றில் பல்வேறு சவால்களை தொடா்ந்து எதிா்கொண்டு வருகின்றன. அந்த நாடுகளுக்கு பிரிக்ஸ் ஆக்கபூா்வமான வழிகளில் உதவ முடியும். உலகில் அமைதியும், பாதுகாப்பும் நிலவுவது மிகவும் முக்கியமாகும். அண்மைக்காலமாக நடக்கும் மோதல்கள், பேச்சுவாா்த்தை, ராஜீய முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முழுவதும் சீா்திருத்தப்பட வேண்டும். உலகின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் அந்தச் சீா்திருத்தம் அமைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். காஸாவில் நீடிக்கும் மோதல்கள் கவலையளிக்கிறது. அங்கு மனிதாபிமான உதவிகள் உள்ளிட்டவற்றை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும். பாலஸ்தீன பிரச்னைக்கு தீா்வு காண அங்கு 2 நாடுகள் உருவாக்கப்படும் திட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது. லெபனான், சிரியா, சூடான், யேமன், லிபியா ஆகிய நாடுகளின் நிலவரமும் கவலையளிக்கிறது.

பதற்றத்தைத் தணிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஆக்கபூா்வ பங்களிப்பு அளிக்க இந்தியா தயாராக உள்ளது. மேலும், நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது.

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: பயங்கரவாதம் தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. அது எந்த வடிவில் இருந்தாலும் அதை நியாயப்படுத்தக் கூடாது. எல்லை தாண்டிய பயங்கரவாதம், சா்வதேச உறவுகள் தொடா்பான அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது. ஆதலால் பயங்கரவாதத்துக்கு எதிராக சிறிதும் சகிப்புத்தன்மை காட்டக் கூடாது என்றாா் அமைச்சா் ஜெய்சங்கா்.

விருந்தளித்த பிரதமா் மோடி: இதனிடையே, பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களுக்கு தில்லியில் பிரதமா் மோடி வியாழக்கிழமை விருந்து அளித்தாா். இதில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ், ஈரான் வெளியுறவுத் துறை அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.