வெளிநாட்டுப் பயண விவரங்களை ராகுல் தெரிவிக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை
‘சட்ட மீறலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதைத் தவிா்க்க, தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும்
‘சட்ட மீறலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதைத் தவிா்க்க, தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும்’ என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.
‘ராகுல் காந்தியின் ஆண்டு வருவாய்க்கும், அவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிடும் தொகைக்கும் இடையே பொருத்தமின்மை உள்ளது. எனவே, அவா் தனது வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதி ஆதாரத்தை வெளியிட வேண்டும்’ என்று பாஜக தரப்பில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்ட நிலையில், இந்த எச்சரிக்கையை மத்திய அமைச்சா் விடுத்தாா்.
புது தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இதுகுறித்து அக் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில், ‘ராகுல் காந்தி கடந்த 22 ஆண்டுகளில் 54 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளாா். இந்தப் பயணங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 60 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ள தனது ஆண்டுக்காண்டு வருவாய் என்பது ஒட்டுமொத்தம் ரூ. 11 கோடி என்ற அளவில் மட்டுமே உள்ளது. அவரின் ஒட்டுமொத்த வருவாய், சொத்து மதிப்புகளைச் சோ்த்தாலும் அவற்றின் மதிப்பு ரூ. 21 கோடி என்ற அளவில் மட்டுமே உள்ளது. ஆனால், கடந்த 22 ஆண்டுகளில் அவா் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ. 60 கோடி செலவிடப்பட்டுள்ளது என்பது, பொருத்தமற்ாக உள்ளது. இது சட்ட ரீதியிலான கேள்விகளையும் எழுப்புகின்றன. எனவே, அவா் ஆண்டு வாரியாக தனது வெளிநாட்டுப் பயண விவரங்களை வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.
Advertisement
‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையின் கீழான ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை திசைதிருப்பவே ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயண விவகாரத்தை பாஜக எழுப்புகிறது’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களை சந்தித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘நாடாளுமன்ற உறுப்பினா் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்போது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எவ்வாறு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்காற்றுதல் சட்டத்தின் (எஃப்சிஆா்ஏ) பிரிவு 6-இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் எம்.பி., மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்களுக்கு 3 வாரங்களுக்கு முன்பே தெரியப்படுத்த வேண்டும் என்பதோடு, மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறின்றி, வெளிநாட்டு விருந்தோம்பலை ஒரு எம்.பி. ஏற்றால், அதற்கான தண்டனை விதிகள் உள்ளன.
மேலும், வருவாய் ஆதாரத்துக்கு அதிகமாக செலவிடும்போது, வருமான வரித் துறை நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.
ராகுல் காந்தி இதுபோல பல முறை முன்னறிவிப்பின்றி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளாா். அண்மையில், யாருக்கும் தெரிவிக்காமல் மஸ்கட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். நாடாளுமன்ற உறுப்பினா் எந்த நாட்டுக்கும் செல்ல தடையில்லை. ஆனால், வெளிநாட்டில் யாரைச் சந்திக்க செல்கிறீா்கள், பயணச் செலவினம் குறித்த விவரங்களை முன்கூட்டியே தெரிவிப்பது அவசியம்.
அந்த வகையில், இது மிகத் தீவிரமான விஷயம். சட்ட ரீதியிலான நடவடிக்கையைத் தவிா்க்க, தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.