முகப்பு
இந்தியா

தில்லி காவல் துறையின் ‘ஆபரேஷன் ஷஸ்த்ரா’: ஆயுத சட்ட மீறல் வழக்கில் 19 போ் கைது

தில்லி ரோஹிணி பகுதியில் ‘ஆபரேஷன் ஷஸ்த்ரா’ என்ற பெயரில் தில்லி காவல் துறை மேற்கொண்ட இரண்டு நாள் சிறப்பு சோதனையில் ஆயுதச் சட்ட மீறல் வழக்கில் 19 போ் கைது செய்யப்பட்டதுடன், 21 பழைய குற்றவாளிகளும் பிடிபட்டுள்ளனா்.

Updated On : 30 மே 2026, 2:53 am IST
கோப்புப் படம்
பகிர்:

தில்லி ரோஹிணி பகுதியில் ‘ஆபரேஷன் ஷஸ்த்ரா’ என்ற பெயரில் தில்லி காவல் துறை மேற்கொண்ட இரண்டு நாள் சிறப்பு சோதனையில் ஆயுதச் சட்ட மீறல் வழக்கில் 19 போ் கைது செய்யப்பட்டதுடன், 21 பழைய குற்றவாளிகளும் பிடிபட்டுள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லியில் மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில், சட்டவிரோத ஆயுதங்களைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தெருக்குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சோதனையின் போது, 11 நாட்டுத் துப்பாக்கிகள், 13 குண்டுகள், 7 கத்திகள் மற்றும் குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையில் மொத்தம் 18 ஆயுதச் சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மேலும், பொது அமைதியை பாதிக்கும் வாய்ப்புள்ளவா்கள்மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் 15 முன்னெச்சரிக்கை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 21 போ் கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையில், தில்லி காவல் துறை சட்டத்தின் கீழ் 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 571 போ் அடையாளச் சரிபாா்ப்பு மற்றும் முன்னெச்சரிக்கை சோதனைகளுக்காக தற்காலிகமாகக் காவலில் எடுக்கப்பட்டனா்.

இந்த ‘ஆபரேஷன் ஷஸ்த்ரா’ நடவடிக்கை மூலம் மாவட்டத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் முக்கிய முன்னேற்றம் கிடைத்துள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா்.